காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் மகன் மீது சிவகாஞ்சி போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர். காவல்நிலையத்தில் இருந்து சம்மன் அனுப்பியும் அவர் ஆஜார் ஆகாததைத் தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் மீண்டும் லண்டன் செல்வதில் சிக்கல் ஏற்படலாம் என்று தெரிகிறது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தாதா ஸ்ரீதர் தனபாலன்(52) தற்போது தலைமறைவு குற்றவாளியாக வெளிநாட்டில் பதுங்கியுள்ளார். இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் பதுங்கி இருப்பதாகச் சொல்லப் படுகிறது.
ஸ்ரீதர் மகன் சந்தோஷ் குமார் லண்டனில் எம்பிஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் அங்கிருந்து இலங்கை வழியாக சென்னை விமான நிலையம் வந்த போது அமலாக்கத்துறையினர் அவரை பிடித்தனர்.
சிவகாஞ்சி போலீஸார் அவரை விசாரித்தனர். மீண்டும் மறுநாள் ஆஜராகும்படி கூறினர். அவர் ஆஜராகாததால் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. இருப்பினும் அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து சிவகாஞ்சி போலீஸார் நீதிமன்ற உத்தரவுப் பெற்று சந்தோஷ்குமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.