தமிழகம்

நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கறிஞரின் வீடு இடிப்பு: போலீஸாருடன் மோதல்

செய்திப்பிரிவு

சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் பணிமனை கட்டப்பட்டு வருகிறது. ரயில் நிற்கும் இடத்தில் இருந்து பயணிகள் கீழே இறங்கி வெளியே வரும் பாதையில் உள்ள சீனிவாசா நகரில் 1000 சதுர அடி கொண்ட நிலத்தில் வழக்கறிஞர் ஜெயமாலினி என்பவர் வீடு மற்றும் அலுவலகம் கட்டியிருந்தார். சுமார் 10 ஆண்டுகளாக இவர் அங்கு குடியிருக்கிறார். இந்த இடத்தை மெட்ரோ ரயில் பணிக்காக ஒப்படைப்பதற்காக வீடு மற்றும் அலுவலகத்தை காலி செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் மூலம் சிஎம்டிஏ இரு முறை நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு ஜெயமாலினி பதில் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நிலையில் ஜெயமாலினி யின் வீட்டை இடிக்க கடந்த 10 நாட்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து மறுநாள் சென்னை மெட்ரோ ரயில்வே வருவாய் அதிகாரி அருண், ஜெயமாலினி வீட்டுக்கு சென்று வீட்டை காலி செய்யுமாறும் விரைவில் இடிக்கப்போகிறோம் என்றும் கூறினார். 2 நாட்களுக்கு முன்பும் அவர் வீட்டை இடிக்கப் போவதாக அதிகாரிகள் கூறினர். ஆனால் ஜெயமாலினி வீட்டை காலி செய்யவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் மெட்ரோ ரயில்வே வருவாய் அதிகாரி அருண், அமைந்தகரை வட்டாட்சியர் சேகர், கோயம்பேடு போலீஸ் உதவி ஆணையர் மோகன் ராஜ், ஆய்வாளர்கள் ரகுபதி, அரிகுமார் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் ஜேசிபி இயந் திரத்துடன் ஜெயமாலினியின் வீட்டை இடிக்க சென்றனர்.

அப்போது ஜெயமாலினி வீட்டின் முன்பு கூடியிருந்த வழக்கறிஞர் களுக்கும், போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்டது. பின்னர் போலீஸார் ஜெயமாலினியின் வீட்டில் உள்ள பொருட்களை வெளியே எடுத்து வைத்துவிட்டு, ஜேசிபி இயந்திரத்தின் மூலம் வீட்டை இடித்து தரைமட்டமாக்கினர்.

SCROLL FOR NEXT