‘இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள’ - இப் படிச் சொன்னால் மகிழுக்கு கோபம் வருகிறது. ”இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்?” என்கிறார் சூடாக!
மதுரை திருப்பாலையைச் சேர்ந்த பாபுகண்ணன் - நிர்மலா தம்பதியின் ஒரே மகள் மகிழ். பெயர், சிகை - உடை அலங்காரம் என எதிலுமே பெண்ணுக்கான அடையாளத்தில் இவர் இல்லை. அணிகலன்கள், அழகு சாதனங்கள் என்று எதையும் வாங்காத, பயன்படுத்தாத அபூர்வப் பெண் இவர்.
என்னைக் கட்டாயப்படுத்தியதில்லை
“அப்பா பெரியாரிஸ்ட். தன்னைச் சுதந்திரமாகச் செயல்பட விட்டதால், அம்மாவுக்கும் அது பிடித்து விட்டது. ஆனால், நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் ஒருபோதும் என்னைக் கட்டாயப்படுத்தியதில்லை. எனக்கும் எல்லா பிள்ளைகளையும் போல காது குத்தி, கம்மல் அணிவித்தார்கள். இரண்டாம் வகுப்பில் இரட்டைச் சடை போட்டுவிட்டார்கள். அதெல்லாம் வெட்டி வேலை என்பது போகப்போகத்தான் புரிந்தது.
நான் சின்னப் பெண்ணாக இருந்தபோது என்னுடன் விளையாடிய சக பெண் பிள்ளைகள் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே வீட்டுக்குள் அடைக்கப்பட்டார்கள். கேட்டால், பெண் பிள்ளைகள் வீதியில் விளையாடக் கூடாதாம். இதுபற்றி அப்பாவிடம் கேட்டபோதுதான், பெண் ஏன், எப்படி அடிமையானாள்? என்ற வரலாற்றைச் சொன்னார். அப்படி அடிமைச் சாசனம் எழுதிக் கொடுக்காமல் தப்பவேண்டும் என்றால், பெரியார் வழிதான் சரி என்று பட்டது; கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டேன்.
முடியை குட்டையாக வெட்டி இருப்பதால் என்னால் சீக்கிரமாக பள்ளிக்குக் கிளம்ப முடிகிறது. தாமதமாக வரும் பெண்கள், ‘இன்னைக்குத் தலைக்குக் குளிச்சேன்பா, முடியைக் காய வெச்சிப் பின்ன லேட் ஆகிடுச்சி’ என்பார்கள். ஆக, என்னுடைய ஹேர் ஸ்டைல், எனது நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, அம்மாவின் வேலைப் பளுவையும் குறைக்கிறது.
மகிழ்
தோற்றமே என்னை தைரியமானவளாகக் காட்டுகிறது
பள்ளியில், கைப்பந்து, எறிபந்து விளையாட்டு அணிகளில் இருக்கிறேன். கம்மல், வளையல் அணிந்தவர்கள் எல்லாம் காயம் பட்டுவிடுமோ என்று பதறுவார்கள். சிலர் ஹேர் கிளிப்பை காணவில்லை, கம்மலைக் காணவில்லை என்று தேடுவார்கள். எனக்கு அப்படி எந்தக் கவனச்சிதறலும் இருக்காது.
இதனால், வெளியூர் போட்டிகளுக்கு ஆள் தேர்வு செய்கிறபோது எனக்கே முன்னுரிமை கிடைக்கிறது. என் தோற்றமே என்னைத் தைரியமானவளாகக் காட்டுகிறது. பயணங்களின்போது, தாவணிப் பெண்களைவிட நான் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறேன். வெளியில் போகும் போது, நானோ அம்மாவோ அப்பாவை ‘!பாடிகார்டாக’ அழைத்துச் செல்வதில்லை” என்கிறார் மகிழ் சிரித்தபடி.
“உண்மையைச் சொல்லுங்கள், விருந்து விஷேசங் களில்கூட நகை அணியும் ஆசை இல்லையா?” என்று கேட்டால், “நீங்களும்தான் நகையேதும் அணிவதில்லை. நான் மட்டும் என்ன நகை மாட்டும் ஸ்டாண்டா?” என்று கேட்கிறார் மகிழ். “9ம் வகுப்பு படிப்பதால் பிரச்சினையில்லை, கல்லூரிக்குப் போன பிறகு?” என்றால், ”கல்யாணமே ஆனாலும் இப்படித்தான் இருப்பேன்” என்கிறார். “ஆக, உங்களுக்குத் தங்கமே பிடிக்காது என்று சொல்லலாமா?” என்றால், “யார் சொன்னது, நிறையத் தங்கம் வாங்க வேண்டும், விளையாட்டுப் போட்டியில். முடிந்தால் ஒலிம்பிக்கில்” என்று புன்னகைத்தார் மகிழ்!
அப்புறம் என்ன, வாழ்த்தி விடைபெற்றோம்!