தமிழகம்

பல்லாவரம் குடிநீர் திட்டப் பணியை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நகராட்சியில் ரூ.100 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

பல்லாவரம் நகராட்சியில் பெருகி வரும் மக்கள் தொகைக் கேற்ப குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, ரூ.100 கோடி செலவில் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம், நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தரைமட்ட தொட்டி அமைய உள்ள ஈஸ்வரி நகர், பச்சையம்மன் கோயில், ஐஸ்வர்யா நகர் மற்றும் கீழ்கட்டளை ஏரி ஆகியவற்றை பார்வையிட்டார். அப்போது, மக்கள் நலனுக்காக கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, பல்லாவரம் எம்எல்ஏ ப.தன்சிங், வருவாய் கோட்டாட்சியர் சாயிராபானு, பல்லாவரம் நகர்மன்றத் தலைவர் கே.எம்.ஆர்.நிசார் அகமது, நகராட்சி ஆணையர் எஸ்.ராமமூர்த்தி, ஆலந்தூர் வட்டாட்சியர் அருளானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

பல்லாவரம் அருகே கீழ்கட்டளை ஏரி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம். உடன் பல்லாவரம் எம்எல்ஏ ப.தன்சிங் மற்றும் அதிகாரிகள்.

SCROLL FOR NEXT