தமிழகம்

கோடநாடு காவலாளி கொலை வழக்கு: கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

செய்திப்பிரிவு

கோடநாடு காவலாளி கொலை வழக்கில் கைதான 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டின் காவ லாளி ஓம் பகதூர்(51) கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொலை செய்யப்பட்டார். அங்கு கொள்ளையடிக்கவும் முயற்சி நடந்தது. இதில் சம்பந்தப்பட்ட வர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த வழக்கில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்தன. முக்கிய குற்றவாளிகளான கனக ராஜ் மற்றும் ஷயான் ஆகியோர் ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் சாலை விபத்துகளில் சிக்கினர். இதில், கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியா னார். கோவை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஷயானை போலீஸார் கைது செய்தனர்.

சந்தோஷ், தீபு, சதீசன், உதய குமார், ஜிஜின், ஜம்சீர் அலி, மனோஜ், சமி ஆகியோரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதில், ஜிஜின் மற்றும் ஜம்சீர் அலி ஆகியோர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு கேரள சிறையில் உள்ளனர். இந்நிலையில், சதீசன், தீபு, ஜிஜின், மனோஜ், உதயகுமார் ஆகியோர் கேரளாவில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டுள்ளதால், அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT