தமிழகம்

தங்கத்துக்கு 3% ஜிஎஸ்டி வரி: ஒரு பவுனுக்கு கூடுதலாக ரூ.440 வசூலிப்பு

செய்திப்பிரிவு

தங்கம் மீதான 3 சதவீத ஜிஎஸ்டி வரி நேற்று முதல் அமலாகியுள்ளதால், நகைக் கடைகளில் பவுனுக்கு ரூ.440 கூடுதலாக வசூலிக்கப்பட்டது.

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி நேற்று முதல் அமலாகியுள்ளது. இதில், தங்கம் மீது 3 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பும் நேற்று முதல் அமலாகியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் கூறியபோது, ‘‘தங்கத்தில் முதலீடு செய்வது தமிழக மக்களின் பாரம்பரியமாகும். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளைவிட தங்க முதலீடு பாதுகாப்பாக இருப்பதே இதற்கு காரணம். தங்கம், வெள்ளி, வைரம் மீது ஏற்கெனவே 1 சதவீத விற்பனை வரி இருந்தது. இது தற்போது 3 சதவீதமாக ஜிஎஸ்டி வரி என விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வரி நேற்று முதல் அமலாகியுள்ளது. இதனால், மக்களுக்கு தங்கம் வாங்கும் செலவு மேலும் கூடியுள்ளது. குறிப்பாக, ஒரு பவுனுக்கு கூடுதலாக ரூ.440 வரி செலுத்த வேண்டும்’’ என்றார்.

பவுனுக்கு ரூ.88 குறைவு

இதற்கிடையில், சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று கணிசமாக குறைந்தது. இதனால், உள்ளூரிலும் தங்கம் விலை சிறிய அளவில் குறைந்தது. சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.88 குறைந்து ரூ.22,064-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2,758-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2,769-க்கு விற்கப்பட்டது.

SCROLL FOR NEXT