தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் ரூ.5 ஆயிரத்து 589 கோடியே 24 லட்சத்தில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 308 தனி வீடுகள் கட்டப்படும் என முதல்வர் கே.பழனிசாமி அறிவித் துள்ளார்.
போதுமான வீட்டு வசதித் திட்டங்களை செயல்படுத்தவும், குடிசைகள் இல்லாத தமிழகத்தை ஏற்படுத்தவும் புதிய குடியிருப்பு மற்றும் உறைவிடக் கொள்கை உருவாக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று விதி 110-ன்கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:
போதுமான வீட்டு வசதித் திட்டங் களை செயல்படுத்தவும், குடிசைகள் இல்லாத தமிழகத்தை ஏற்படுத்தவும் புதிய குடியிருப்பு மற்றும் உறைவிடக் கொள்கை உருவாக்கப்படும்.
வீடு கட்டும் செலவைக் குறைத் தல், பொருளாதாரத்தில் நலிந்த மற்றும் குறைந்த வருவாய் பிரிவினரை உள்ளடக்கிய அனை வருக்கும் போதுமான வீட்டுவசதி கிடைக்கச் செய்தல், வாங்கத் தகுந்த விலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகள் கட்ட இடம் ஒதுக்கீடு செய்தல், மின்சாரம், குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடு வழங்குவதை உறுதி செய்தல், நகரங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நகரங்களில் நீடித்த, நிலையான சுற்றுச்சூழல் சார்ந்த வாழ்க்கை முறையை உறுதி செய்தல், நிலையான நகரமயமாக்குதலை ஊக்குவித்தல், சட்டம் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள், பெருந்திட்டங்கள், வளர்ச்சிக் கட்டுப் பாட்டு விதிகளில் திருத்தங்கள் கொண்டு வருதல், ஒற்றைச்சாளர முறையை உருவாக்குதல், மனை வரைபடம் ஒப்புதல், வரைபட அனுமதி பெற காலக்கெடு நிர்ணயித்தல், மூத்த குடிமக்கள், பணிபுரியும் பெண்கள் பாதுகாப் பினை கருத்தில் கொண்டு வீடுகள் கட்டுதல் மற்றும் அதற்குரிய கட்டமைப்புகளை உருவாக்குதல், வாடகை வீடு வழங்கும் முறையை உருவாக்குதல் ஆகியவை தமிழக அரசின் புதிய குடியிருப்பு மற்றும் உறைவிடக் கொள்கையின் சிறப்பு அம்சங்களாகும்.
தனி வீடுகள்
பிரதம மந்திரி வீட்டுவசதி திட்ட நிதி, சிறப்பு மாற்றத்தக்க வளர்ச்சி உரிமைச் சான்றிதழ் மூலம் திரட்டப்படும் நிதி, பயனாளிகளின் பங்களிப்புத் தொகை, தமிழக அரசு வழங்கும் பற்றாக்குறை நிதி ஆகியவற்றைக் கொண்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் எர்ணாவூரில் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காக ரூ.676 கோடியே 61 லட்சத்தில் 6 ஆயிரத்து 874 வீடுகள் கட்டப் படும்.
பிரதம மந்திரியின் அனை வருக்கும் வீட்டுவசதித் திட்டத்தில் பயனாளிகள் தாமாகவே முன்வந்து வீடு கட்டும் வகைப்பாட்டின்கீழ் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் ரூ. 5 ஆயிரத்து 589 கோடியே 24 லட்சத்தில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 308 தனி வீடுகள் கட்டப்படும்.
நடப்பாண்டில் பயனாளிகள் பங்களிப்புடன் வாங்கும் திறனுக் கேற்ற வீடுகள் கட்டும் வகைப் பாட்டின்கீழ் ஒரு குடியிருப்பு ரூ.10 லட்சம் வீதம் ரூ.1,482 கோடியே 80 லட்சத்தில் 14 ஆயிரத்து 828 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். இந்த இரு வகைப்பாட்டின்கீழ் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு மாநில அரசின் மானியமாக ரூ. 2 ஆயிரத்து 7 கோடியே 53 லட்சம் வழங்கப் படும்.
வல்லுநர்கள் நியமனம்
திட்டமிட்ட, நீடித்த, நிலையான நகர வளர்ச்சியை ஏற்படுத்த நிலப் பயன்பாடு குறித்து திட்டமிடுதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டங்களை வகுத்தல், பாதுகாப்பு அம்சங்களுடன் வசிக்கும் இடங்களை ஏற்படுத்துதல், வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு, போக்கு வரத்து போன்ற தேவைகளை அறிந்து சிறப்பான தீர்வுகளைப் பரிந்துரைக்க தகுதி பெற்ற தனிச் சிறப்புடைய நகரமைப்பு வல்லுநர்களை பணியில் ஈடுபடுத்துவது அவசியமாகிறது.
மண்டல மற்றும் உள்ளூர் விதி முறைகளை அறிந்து மண்டலங் களுக்கு இடையேயான நகர வளர்ச்சி குறித்த அம்சங்களை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை நகரமைப்பு வல்லுநர்கள் உருவாக்க வேண்டும். இதற்காக மாநில அளவில் நகரமைப்பு வல்லுநர் களுக்கான பணித் தொகுப்பினை ஏற்படுத்தி, அதற்கென தனியாக பணி விதிகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணித் தொகுப்பில் உள்ள நகரமைப்பு வல்லுநர்கள், நகர் ஊரமைப்புத் துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், உள்ளூர் திட்டக் குழுமங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றுப் பணி அடிப்படையில் பணியமர்த்தப்படுவர். நகர் மற்றும் ஊரமைப்புத் துறையின் ஆணையாளர் பணிநிலை கட்டுப் பாட்டு தகவாளராகச் செயல் படுவார்.
இவ்வாறு முதல்வர் கே.பழனி சாமி கூறினார்.