சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் 24.5 கிலோ எடையுள்ள வெள்ளிப்பல்லக்கும், முக்கிய ஆவணமும் மாயமாகியுள்ளன.
சங்கரன்கோவிலில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சுவாமி வீதி உலாவுக்காக வெள்ளியால் செய்யப்பட்ட யானை வாகனம், மயில் வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளன. தினமும், காலையில் சிறப்பு பூஜையின் போதும், இரவில் பள்ளியறை பூஜைக்கும் வெள்ளியாலான சிறிய பல்லக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. பழமையான இந்தப் பல்லக்கை கோயிலைச் சேர்ந்த குறிப்பிட்ட பிரிவினரே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், அதிக எடை இருப்பதாக கூறி இந்தப் பல்லக்கு பயன்படுத்தாமல் விட்டனர். வேறு ஒரு சாதாரண பல்லக்கை பயன்படுத்தி வந்துள்ளனர்.
தற்போது கோயில் துணை ஆணையர் பொன்சுவாமிநாதன் சிவகங்கை மாவட்டத்துக்கு மாறுதலாகி செல்வதால், புதிய துணை ஆணையர் செல்லத்துரையிடம் பொறுப்பை ஒப்படைப்பதற்காக பொருட்களின் இருப்பை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. அப்போது, கடந்த டிசம்பர் மாதம் கணக்கெடுப்பின் போது இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்த 24.5 கிலோ எடையுள்ள வெள்ளிப் பல்லக்கை காணவில்லை. கோயிலின் அனைத்துப் பகுதிகளிலும் தேடிப்பார்த்தும் அது கிடைக்கவில்லை.
போலீஸில் புகார்
துணை ஆணையர் பொன்சுவாமி நாதன், சங்கரன்கோவில் டவுண் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில், ரூ.11.3 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பல்லக்கு மற்றும் முக்கிய ஆவணம் எண்- 55/2016-ஐ காணவில்லை என போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
சங்கரன்கோவில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அனுஷ்கா மனோகரி விசாரிக்கிறார். குற்றவாளிகளை போலீஸார் நெருங்கிய பின்னரே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் சங்கரன்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதிமுக முற்றுகை
இதனிடையே, வெள்ளிப்பல்லக்கு மாயமான விவகாரத்தில் நீதி விசாரணை கேட்டு மதிமுகவினர் நேற்று கோயில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். புறநகர் மாவட்ட மதிமுக செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை வகித்தார். கோயில் துணை ஆணையர் செல்லத்துரையிடம் அவர்கள் அளித்த மனுவில், இச்சம்பவம் தொடர்பாக, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இந்தச் சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயில் வளாகத்துக்குள் அமைந்துள்ள தேவையற்ற கடைகளை அகற்ற வேண்டும். பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 15-ம் தேதி சங்கரன்கோவிலில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.