கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க கொந்தகை கிராமத்தில் 2 ஏக்கர் நிலம் தொல்லியல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரி வித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் அதிமுக உறுப்பினர் சோ.மாரியப்பன் கென்னடி (மானாமதுரை) கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசிய தாவது:
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வட்டம் கீழடி கிராமத்தில் கடந்த 2014 பிப்ரவரி முதல் செப்டம்பர் வரையிலும், 2015 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலும் 2 ஏக்கரில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டிடப் பகுதிகள், கழிவு நீர் குழாய்கள், சுடுமண்ணால் ஆன உறை கிணறு, பானைகள், பானை ஓடுகள், கண்ணாடி மணிகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. 2014-ல் 1,800 தொல் பொருட்களும், 2015-ல் மேலும் 4,125 தொல் பொருட் களும் கண்டெடுக்கப்பட்டன.
இந்த தொல் பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க கீழடி கிராமத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தருமாறு தொல்லியல் துறை தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. அதன்படி கீழடியில் கள அருங்காட்சியகம் அமைக்க 72 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் கனிமொழி மதி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட் களை மைசூருக்கு எடுத்துச் செல்ல தடை விதித்தது.
ஆனாலும், முக்கியமான பொருட்களின் காலம் கண்டறிய கார்பன் சோதனை மேற்கொள்ள அனுமதி அளித்தது. அகழாய்வு செய்யப்பட்ட குழிகளை மூடவும் அனுமதி வழங்கியது.
2017-18-ம் ஆண்டில் கீழடியில் 3-ம்கட்ட அகழாய்வுக்கு மத்திய தொல்லியல் அறிவுரை குழுமத்தி னால் அனுமதி வழங்கப்பட்டு மத்திய தொல்லியல் துறையால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அருங்காட்சியகம் அமைக்க கீழடியில் ஒதுக்கப்பட்ட 72 சென்ட் நிலம் போதுமானதாக இல்லை என மத்திய தொல்லியல் துறை தெரிவித்தது. எனவே, திருபு வனம் வட்டம் கொந்தகை கிராமத் தில் 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட் டுள்ளது.
சிந்து சமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் குறித்த சிறப்பு நூலகம் மற்றும் காட்சிக் கூடம் ரூ. 1 கோடியில் கீழடியில் அமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிட நாகரிகத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கும்.
இவ்வாறு அமைச்சர் செங் கோட்டையன் கூறினார்.