தமிழகம்

வங்கதேசத்தினர் 5 பேர் கைது எதிரொலி: திருப்பூரில் தொழிலாளர் ஆவணங்களை முறைப்படுத்தி பராமரிப்பது சாத்தியமற்றதா?

இரா.கார்த்திகேயன்

திருப்பூரில் தொழிலாளர், தொழிற்சாலை சட்டங்களை முறையாக அமல்படுத்தினால் சமூகவிரோதிகள் தஞ்சமடைவதை தடுக்க முடியும், உரிய ஆவணங்கள் இன்றி தொழிலாளர்கள் போர்வையில் சமூக விரோதிகள் பணியாற்றுவதை தடுக்க முடியும் என்று வலியுறுத்தப்படுகிறது.

திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 5 பேரை, திருப்பூர் வடக்கு போலீஸார் கைது செய்து, சென்னை புழல் சிறைக்கு நேற்று அழைத்துச் சென்றனர்.

இது குறித்து போலீஸார் கூறியதாவது: திருப்பூர் வளையங்காடு பகுதியில் உள்ள பிரபல தனியார் பின்னலாடை நிறுவனத்தில் வங்கதேசம் நாரன்ஹன்ஸ் மாவட்டம் டனா கிராமத்தை சேர்ந்த முகமது டெல்வார் உசேன் (28), கிமிலா மாவட்டம் லட்ஜசம் கிராமத்தை சேர்ந்த முகமத் சகாதத் (28), டனா கிராமத்தை சேர்ந்த முகமது பாபு (27), அதே கிராமத்தை சேர்ந்த முகமத் மம்முனு (22), கலுனா மாவட்டம் கொய்ரா கிராமத்தை சேர்ந்த ஆசிக் (20), சத்பூர் மாவட்டம் குமிலா கிராமத்தை சேர்ந்த ரசோன்மிலா சத்தார் (22) ஆகிய 6 பேர் கடந்த ஜூலை 15-ம் தேதி முதல் திருப்பூர் ராம்நகர் 3-வது வீதியில் தங்கி, பின்னலாடை நிறுவனத்தில் பவர்டேபிள் தொழிலாளர்களாக வேலை பார்த்துள்ளனர்.

இதில், முகமது டெல்வார் உசேனிடம் மட்டும் கடவுச்சீட்டு இருந்துள்ளது. இவர், ஐபிஎல் கிரிக்கெட் பார்ப்பதற்காக மேற்குவங்கம் வந்து, பின்னர், திருப்பூருக்கு வந்துள்ளார். மற்ற 5 பேரும் கடந்த ஒன்றரை மாதங்களாக திருப்பூரில் எவ்வித ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாக தங்கி வேலைபார்த்து வந்துள்ளனர்.

தற்போது புதிய பின்னலாடை நிறுவனத்தில் வேலைபார்த்தபோது, அங்கு ஊதியம் தர ஆவணங்கள் கேட்டுள்ளனர். அப்போதுதான் அனைவரும் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. வடக்கு போலீஸார் அவர்களை கைது செய்து, திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் -1 நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

சரக்கு லாரியில் பயணம்

போலீஸார் கூறியதாவது: வங்கதேசத்திலிருந்து சரக்கு வாகனங்களில் மேற்குவங்கத்துக்கு 5 பேரும் வந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள்போல் ஆவணங்கள் தயாரிக்க, முகவர் சிலரிடம் பேசியுள்ளனர். அதில், முகமத் சகாதத், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்போல் ஆதார் அட்டை எடுத்துள்ளார், மற்றவர்கள் எடுக்கவில்லை. திருப்பூருக்கு சரக்கு லாரியிலேயே வந்துள்ளனர் என்றனர்.

சமூகவிரோதிகள்

சிஐடியு பனியன் சங்க பொதுச்செயலாளர் ஜி.சம்பத் கூறியதாவது: குறைந்த கூலிக்கு ஆட்கள் கிடைப்பதால், எவ்வித ஆவணங்களும் இன்றி தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கும் நிலை ஏற்படுகிறது. தொழிலாளர் மற்றும் தொழிற்சாலை சட்டங்களை முறையாக அமல்படுத்தினால் இஎஸ்ஐ, பிஎஃப்., உள்ளிட்ட அனைத்துச் சலுகைகளும் கிடைக்க ஆவணங்கள் தேவை. தற்போதையபோக்கு திருப்பூரில் தொடருமானால், தொழிலாளர்கள் போர்வையில் சமூகவிரோதிகள் தஞ்சம் புக வாய்ப்புகள் அதிகம். ஆகவே தொழிலாளர் மற்றும் தொழிற்சாலை சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும். அப்போதுதான், தொழிலாளர் ஆவணங்களை முறைப்படுத்தி பராமரிப்பது சாத்தியமாகும் என்றார்.

திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் பொ.நாகராஜன் கூறும்போது, ‘கைது செய்யப்பட்ட 5 பேரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை. அவர்களது உறவினர்களிடம் விசாரித்தபோது, வங்கதேசத்திலிருந்து மேற்குவங்கம் வழியாக திருப்பூருக்கு வந்தது தெரியவந்தது. தொழிற்சாலைகளில் தங்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களின் ஆவணங்களை முறைப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

சிறு நிறுவனங்களில் தஞ்சம்

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கச் செயலாளர் விஜயகுமார் கூறும்போது, ‘திருப்பூரில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர். தொழிலாளர்களிடம் அடையாளச் சான்று, புகைப்படம் ஆகியவை கேட்டுப்பெற வேண்டும். ஜாப் ஒர்க், பவர்டேபிள் போன்ற சிறிய நிறுவனங்கள் அதனை செய்வதில்லை. இதனால் எவ்வித ஆவணங்களும் இன்றி சிறிய நிறுவனங்களில் தஞ்சம் அடைகின்றனர். பின்னலாடை சார்ந்து திருப்பூரில் 7,500 நிறுவனங்கள் உள்ளன. இவைதவிர, ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அனைத்து வகையான பின்னலாடை நிறுவனங்களும் அரசின் விதிகளை, பின்பற்றி அடையாளச் சான்றுகளைப் பெற்று பராமரிக்க வேண்டும். இது தொடர்பான ஆவணங்களைப் பராமரிக்க இணைய சேவையை போலீஸார் ஆரம்பித்தால், தொழில்துறைக்கு பக்கபலமாக இருக்கும் என்றார்.

SCROLL FOR NEXT