மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பூங்கா தமிழகத்திலேயே முதன் முறையாக மதுரையில் செயல் பாட்டுக்கு வந்தது.
மதுரை மாநகராட்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுவர் பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்கள், இயல்பான குழந்தைகள் மட்டும் விளையாடக் கூடிய உபகரணங்களுடன் அமைந்துள்ளன. இவற்றில் ஒன்று கூட, மன வளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பூங்கா இல்லை. அவர்களும், சராசரி குழந்தைகளை போல விளையாட மதுரை - அழகர் கோவில் சாலையில் ரூ. 40.30 லட்சம் மதிப்பீட்டில், தமிழகத்திலேயே முதன்முறையாக மாநகராட்சி நவீன சிறப்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பூங்கா, தற்போது திருநெல்வேலி ஆட்சி யராக இருக்கும் சந்தீப்நந்தூரி யின் முயற்சியால் தொடங்கப்பட்டுள் ளது. மாநகராட்சி பங்களிப்பாக ரூ. 25.30 லட்சம், குரூப் லிவிங் பவுண்டேசன் என்ற தனியார் தொண்டு நிறுவனம் பங்களிப்பு ரூ.15 லட்சத்தில் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறன் குழந்தைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ள இப்பூங்காவில் மற்ற இயல்பான குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த பூங்காவில் ஊஞ்சல்கள் ‘சீட்’ பெல்ட் போட்டு தனியாக ஆடவும், நடக்க முடியாத குழந்தைகள் வீல் சேருடன் அமர்ந்தும், பெற்றோருடன் அமர்ந்தும் ஆடுவதற்கேற்ப பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
சாதாரண குழந்தைகளை போல், இவர்களும் சறுக்கு விளையாடலாம். குழந்தைகள் மெதுவாக விழும் வகையில்,ரோலர் ப்ளேடு சறுக்கு விளையாட்டு உபகரணமும் உள்ளது. வீல் சேரில் சென்று விளையாடும் பேஸ்கட் பால் மைதானமும் தயாராகிறது.
மாற்றுத்திறன் குழந்தைகள் நடப்பதற்கு ஏற்ப, புத்துணர்ச்சி அடையும் வகையிலான பிரத்தி யேக டைல்ஸ்களை கொண்டு பூங்காவின் தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
தினமும் மாற்றுத்திறன் குழந்தை களை அவர்களது பெற்றோர் காலையில் அழைத்துவந்து மாலை வரை விளையாடும் வகையில், 10 வகை விளையாட்டு உப கரணங்களுடன் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. குழந்தை கள் மனதை சாந்தப்படுத்தவும், குதூகலம் அடையவும் செய்யும் வகையில் செடி, கொடி கள், வண்ண வண்ண விளை யாட்டு உபகரணங்களும் அமைந் துள்ளன.
மன வளர்ச்சி குன்றிய குழந்தை களுக்கான சிகிச்சை அறை, பெற்றோருக்கான ஆலோசனை மையம், நவீன கழிப்பறை, இயற்கை உணவுக்கூடம், நூலகம், தகவல் மையம், உடல் இயக்க சவால் கொண்டோருக்கான தளம், நடைபாதை, சிறப்பு விளை யாட்டு சாதனங்கள், சுற்றுச் சூழலுடன் இயற்கை தோட்டம், பெற்றோருக்கான இயக்க சூழ லுடன் விளையாட்டுத் தளம் உள் ளிட்டவை இந்தப் பூங்காவின் சிறப்பு.
இந்த பூங்கா, தற்போது மதுரை மாநகராட்சிக்கு பெருமையை தேடித் தருவதாக அமைந்துள்ளது. தற்போது பூங்கா பராமரிக்கும் பொறுப்பு மதுரை கூட்டு வாழ்வு அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.