மழையின் அளவு குறைந்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. 6 நகரங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மழை குறைந்து காணப்படுகிறது. நேற்று காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி, வால்பாறையில் 2 செமீ, புதுக்கோட்டை, விழுப்புரம், திருமயம், பெரியார், சின்னகல்லார் ஆகிய பகுதிகளில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நகரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெயில் அளவின்படி, சென்னையில் 101.84, வேலூரில் 101.66, புதுச்சேரியில் 101.48, கடலூர், திருச்சியில் தலா 101.3, மதுரையில் 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.