தமிழகம்

5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பு எதிரொலி: சமையல் காஸ் விலை சிலிண்டருக்கு ரூ.32 உயர்வு

செய்திப்பிரிவு

5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதையடுத்து மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.32 அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கிராமப்புறங் களிலும் சமையல் செய்ய விறகு அடுப்புகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக எரிவாயு அடுப்புகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால், சமையல் எரிவாயு சிலிண்டரின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் அதன் விலையும் உயர்ந்து வருகிறது. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது மத்திய அரசு திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த் தியது.

இந்த விலை உயர்வு மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை அறிந்த ஜெயலலிதா சமையல் எரிவாயு சிலிண்டர் மீது மாநில அரசு விதிக்கும் மதிப்புக் கூட்டு வரியான (வாட்) 4 சதவீத வரியை ரத்து செய்து உத்தரவிட்டார். அத்துடன், சமையல் எரிவாயு சிலிண்டர் மீதான உற்பத்தி வரியையும் ரத்து செய்தார். இதனால், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.15 குறைந்தது.

இந்நிலையில், மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பல்வேறு பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சில பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டு உபயோகத் துக்காகப் பயன்படுத்தப்படும் மானிய விலை எரிவாயு சிலிண்டர்களுக்கு ஜிஎஸ்டியில் 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.32 அதிகரித்துள்ளது.

இதன்படி, சென்னையில் ரூ.560-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சிலிண்டர் ஒன்றின் விலை தற்போது ரூ.592 ஆக அதிகரித்துள்ளது. இதில், மானியத் தொகை ரூ.108 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். விநியோகஸ்தர்களுக்கு ரூ.47.63 கமிஷன் தொகையாக கிடைக்கும். இந்த கமிஷன் தொகைக்குக் கூட 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியாக ரூ.2.38 விதிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்துக்கு ஆண்டொன்றுக்கு 14.2 கிலோ எடை கொண்ட 12 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மானிய விலையில் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

6 ஆண்டுகளுக்குப் பின்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வரலாறு காணாத அளவுக்கு விலை ஏறியதையடுத்து உள்நாட்டு சந்தையிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. இதன்படி, கடந்த 2011, ஜுன் 25-ம் தேதி மிக அதிகபட்சமாக சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50 விலை ஏற்றப்பட்டது. அதன் பிறகு கடந்த 6 ஆண்டுகளில் ஒரே நேரத்தில் இவ்வளவு அதிகமாக விலை ஏற்றியிருப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT