திருப்பூரில் பிடிபட்ட ரூ. 570 கோடி ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சிபிஐ தனது அறிக்கையை சீலிட்ட கவரில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவில், ‘‘தேர்தல் நேரத்தில் கடந்த 2016-ம் ஆண்டு மே 13-ம் தேதி திருப்பூர் அருகே 3 கண்டெய்னர் லாரிகளில் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ. 570 கோடி பிடிபட்டது. இந்தப்பணம் தொடர்பாக ரிசர்வ் வங்கியும், ஸ்டேட் வங்கியும் முன்னுக்குப்பின் முரணான பதில்களைக் கூறிவருவதால், இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா, இதுதொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தனது பதிலை சீலிட்ட கவரில் தாக்கல் செய்துள்ளது. பிடிபட்ட ரூ. 570 கோடி ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் அதில் தெரிவித்துள்ளனர்.