வண்ண எழுத்துகளால் ஒளிரும் மின் பலகை; நான்கு அறைகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள்; பள்ளி வளாகத்தின் மையத்தில் பிரம்மாண்டமான கலை யரங்கம்; தாமாகவே சுத்தம் செய்து கொள்ளும் அதி நவீன தானியங்கி கழிவறைகள்…
நாகப்பட்டினத்தில் உள்ள காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியின் வசதிகளை இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
1 முதல் 8-ம் வகுப்பு வரை 337 மாணவர்களும், 11 ஆசிரியர்களும், 3 சிறப்பாசிரியர்களும் உள்ளனர். 1 முதல் 4-ம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகளும் உள்ளன. ஆண்டுக்கு 3 மாத காலம் ஆங்கில உரையாடல் பயிற்சி வழங்கப்படுகிறது. நாட்டிய வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கராத்தே, யோகா பயிற்சியும் உண்டு.
1-ம் வகுப்பில் ஒரு மாணவர் சேர்ந் தது முதல் 8-ம் வகுப்பு முடித்து பள்ளியை விட்டு போகும் வரை ஒவ்வொரு பாடத்திலும் எந்தெந்த திறன்களை எப்போது அடைந்தார் என்பதை பதிவு செய்கிறார்கள். ஒவ்வொரு வகுப்பிலும், ஒவ்வொரு பருவத்திலும் மாணவர்கள் அடைந்த திறன்கள் பதிவு செய்யப்பட்டு, நூலாகத் தொகுத்து, ஆவணமாகப் பாதுகாத்து வருகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் பரிமாற்றத் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே, இந்தப் பள்ளியில் மாணவர் பரிமாற்றத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. நாகப்பட்டினம் நகரில் உள்ள இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 2015-ம் ஆண்டு ஒரத்தூர் என்ற கிராமத்தில் செயல்படும் நடுநிலைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த கிராமத்தில் இருந்த செங்கல் சூளை, மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக களிமண்ணை பிசைவது; கல் தயாரித்து சூளையில் வேக வைப் பது; சூளை சூட்டில் கல் சிவந்து செங்கல் லாக மாறுவது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்த்தபோது ஒரு அறிவியல் ஆய்வகத்தை நேரில் பார்த்தது போன்ற பிரமிப்பை மாணவர்கள் அடைந்ததாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
அதேபோல் கடந்த ஆண்டு காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளி - கீழ்வேளூர் ஒன்றியம், நாகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடையே மாணவர் பரிமாற்றத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தப் பரிமாற்றத் திட்டம் பற்றி காடம்பாடி பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.இளமாறன் கூறியதாவது:
ரயிலில் பயணம் செய்யாத கிராமத்து மாணவர்களை ரயிலில் அழைத்து வந்தோம். நாகப்பட்டினம் வந்து சேர்ந்தவுடன், ரயில்களின் இயக்கத்தை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் ஒரு ரயில் நிலையத்தில் என்னென்ன பணிகள் நடைபெறுகின்றன என்பதை ஸ்டேஷன் மாஸ்டர் விளக்கினார். குறிப்பாக, வேகமாக வரும் ரயில் தண்டவாளத்தில் ஒரு தடத்தில் இருந்து இன்னொரு தடத்துக்கு எவ்வாறு மாறுகிறது என்பது பற்றியும், ரயில்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில் சிக்னல்களின் முக்கியத்துவம் பற்றியும் அவர் விளக்கியபோது, மாணவர்கள் வியப்படைந்தனர்.
எங்கள் பள்ளி மாணவர்கள் நாகலூருக்கு சென்றபோது, அங்குள்ள மீன் பண்ணையில் நடைபெறும் பல நிகழ்வுகளை விவசாயிகள் செயல் விளக்கமாக செய்து காட்டினர்.
அடுத்த முறை அதே பள்ளிக்கு எங்கள் மாணவர்கள் சென்றபோது, வயல் வெளியில் ஒரு இடத்தில் தீ பற்ற வைத்து, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வாகனம், அந்த தீயை அணைப்பதை நேரில் மாணவர்கள் கண்டனர். தீயணைப்பு நிலைய பணிகள், தீயணைப்பு வீரர்களின் கடமைகள் போன்றவை பற்றி மாணவர்களுக்கு விளக்கப்பட்டன.
அந்தப் பள்ளி மாணவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்தபோது, நாகப்பட்டினம் கடற்கரைக்கு அழைத்துச் சென்று, கடற்கரையில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் பற்றி விளக்கினோம். எல்லாவற்றுக்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை சுற்றி பார்த்தது மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மாவட்ட ஆட்சியர் அறை முதல் ஒவ்வொரு அதிகாரியின் அறைக்கும் மாணவர்கள் சென்றனர். மாவட்ட நிர்வாகம் செயல்படும் முறை, அங்குள்ள துறைகள், ஒவ்வொரு துறையின் கடமைகள் போன்றவை பற்றி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
இந்த பரிமாற்ற நிகழ்ச்சியின் மூலம் பாடப் புத்தகங்களுக்கு வெளியேயும் கற்றுக்கொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன என்பதை மாணவர்கள் உணர்ந்து கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
காந்தத் தன்மையுள்ள கரும்பலகையில் எழுத்துகளை ஒட்டி பாடம் பயிலும் மாணவர்கள். உள்படம்: தலைமை ஆசிரியர் எஸ்.இளமாறன்
வகுப்பறை நிகழ்வுகளைப் பொருத்தமட்டில் காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தனித்துவமான பல செயல்பாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக, பள்ளியில் உள்ள ஒளிரும் மின் பலகையில் தினமும் புதிய புதிய ஆங்கில சொற்கள் நகர்ந்து கொண்டிருக்கும். அதேபோல் 2 முதல் 16 வரை கணித வாய்பாடுகள் நகரும். ஒவ்வொரு நாளும் பார்த்த வார்த்தைகள், வாய்பாடுகள் மாணவர்கள் மனதில் பதிந்துள்ளனவா என்பது பற்றி மாலை நேரத்தில் பரிசோதித்து பார்க்கப்படுகிறது.
காந்தத் தன்மை கொண்ட கரும் பலகைகள் வகுப்புகளில் உள்ளன. இந்தப் பலகைகளில் எழுத்துகளை ஒட்டி மாணவர்கள் புதிய புதிய வார்த்தை களை உருவாக்குகிறார்கள். தொடக்க நிலை வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துகள், எண்களை அறிமுகம் செய்ய இந்த காந்த பலகை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே இரண்டு வகுப்பறை களில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு மேலும் இரண்டு வகுப்பறைகளில் அதி நவீன தொடு திரையுடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ் உருவாக்கப்பட்டுள்ளது. கணிதம், ஆங்கிலம், அறிவியல் பாடங்கள் மட்டுமின்றி, சமூக அறிவியல் பாடங்களும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளில் காணொலி காட்சிகளாக மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றன.
பல தனியார் பள்ளிகளுக்கு மத்தியில் போட்டி மிகுந்த சூழலில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த அரசு பள்ளி, தரமான கல்வியின் மூலம் சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக இதே பள்ளியில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் இளமாறன் பள்ளியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளார்.
“ரோட்டரி சங்கம், ஓஎன்ஜிசி, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உதவியால் புதிய வகுப்பறைகள், சத்துணவு உணவுக் கூடம், தானியங்கி நவீன கழிப்பறைகள், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் என பல வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் நண்பரின் உதவியால் கண்ணைக் கவரும் கலையரங்கம் கட்டப்பட்டது. இவ்வாறு ரூ.50 லட்சத்துக்கும் மேற்பட்ட செலவில் பல வசதிகளை உருவாக்கியுள்ளோம். இந்த வசதிகளின் காரணமாக ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி வருகிறோம். எங்கள் பள்ளியில் 8-ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு இங்குள்ள அரசு, தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அங்கெல்லாம் 10, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களில் கணிசமானோர் எங்கள் பள்ளி மாணவர்களாக உள்ளனர்” என்கிறார் இளமாறன்.
தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 94438 73919
நாகை மாவட்டம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளி கலையரங்கில் நடனப் பயிற்சி செய்யும் மாணவர்கள்.