தமிழகம்

எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

எழும்பூர் பொருளாதார குற்ற வியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் 44 லட்சம் பவுண்டுகளை முறைகேடாக டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தின் பெயரில் முதலீடு செய்தது தொடர்பாக கடந்த 1996-ல் டிடிவி தினகரன் மீது அமலாக்கப்பிரிவினர் அந்நிய செலாவணி மோசடி வழக்கைப் பதிவு செய்தனர்.

மேலும் ஒரு வழக்கு

இதேபோல் ஐரோப்பிய நாடுகளில் ஹாப்ஸ்கேரப்ட் ஹோல்ட் என்ற பெயரில் ஹோட்டல் தொடங்குவதற்காக டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட், டெண்டி இன்வெஸ்ட்மெண்ட், பேனியன் ட்ரீ ஆகிய மூன்று நிறுவனங்கள் சார்பில் பார்க்லே வங்கியில் 36.36 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் ஒரு லட்சம் பவுண்டுகளை முறைகேடாக முதலீடு செய்தது தொடர்பாக டிடிவி. தினகரன் மீது மேலும் ஒரு வழக்கும் அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிடிவி.தினகரன் மீதான இந்த வழக்குகள் 20 ஆண்டுகளுக்குப்பிறகு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த பி்ப்ரவரி மாதம் முதல் எழும்பூர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் வழக்கில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி டிடிவி.தினகரன் மீதான குற்றச்சாட்டு நீதிபதி எஸ். மலர்மதி முன்பாக பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுப்பதிவின் போது தனது தரப்பு வாதத்தை எடுத்து வைக்க தனக்கும், தனது வழக்கறிஞருக்கும் போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது சட்டவிரோதமானது. எனவே அந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி டிடிவி.தினகரன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜூலை 17-க்கு தள்ளிவைப்பு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், எழும்பூர் நீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் மீது நடைபெற்று வரும் அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு ஜூலை 17-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்தார்.

மேலும், இதுதொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 17-க்கு தள்ளி வைத்தார்.

SCROLL FOR NEXT