தமிழகம்

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை: தொழிற்கல்வி மாணவர்கள் கலந்தாய்வு தொடங்கியது - முதல் 11 இடங்களை பிடித்தோருக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை

செய்திப்பிரிவு

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையில் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது. தரவரிசைப் பட்டியலில் முதல் 11 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 500 இடங்கள் உள்ளன. இதில் சேர ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 77 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 987 பேரின் விண்ணப்பம் தகுதியானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

அவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டு அதைத் தொடர்ந்து தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தொழிற் கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17, 18 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொழிற்கல்வி பிரிவின் கீழ் 6,224 இடங்கள் உள்ளன.

இதற்கு 2,084 பேர் விண்ணப் பித்திருந்தனர். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புபிரிவினருக்கு 315 இடங்கள் ஒதுக் கப்பட்டுள்ளன. அதில் சேர 2 பேர் மட்டும் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழிற் கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. தரவரிசைப் பட்டிய லில் முதல் 11 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கும் சிறப்பு ஒதுக்கீட்டுப்பிரிவின் கீழ் பிஎஸ்ஜி கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங் பாடத்தை தேர்வு செய்த மாற்றுத்திறனாளி மாணவர்அருண்குமாருக்கும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ராஜேந்திர ரத்னூ, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ஜெ.இந்துமதி உள்ளிட்டோர் உடனி ருந்தனர். ஒதுக்கீட்டு ஆணையை வழங்கிய பின்னர் அமைச்சர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:

மருத்துவ மாணவர் சேர்க்கை பணியில் ஏற்பட்டுள்ள தொய்வு காரணமாக இந்த ஆண்டு கலந்தாய்வு சற்று தாமதமாக தொடங்கியுள்ளது. குறைந்த காலத்துக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டியுள்ளது. இதைத் தொடர்ந்து, கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளோம். அதோடு அமர்வுகளின் எண் ணிக்கை 8-லிருந்து 9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காலை 7 மணி கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் முந்தைய நாள் இரவு வந்து அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கிக் கொள்ளலாம்.

அதேபோல், இரவு 7 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் பங் கேற்கும் மாணவர்களும் பஸ், ரெயில் கிடைக்காவிட்டால் அன் றைய தினம் இரவு பல்கலைக்கழக விடுதியில் தங்கிக் கொள்ளலாம். இதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு தனியார் சுயநிதி கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டில் வரும் 15 ஆயிரத்து 770 இடங் களை கலந்தாய்வு மூலமே நிரப்பிக்கொள்ள அண்ணா பல்கலைக்கழகத்திடம் சரண்டர் செய்துள்ளன. அந்த வகையில், கலந்தாய்வு மூலமாக ஒரு லட்சத்து 75,500 இடங்கள் நிரப்பப்படும்.

எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு முன்னரே பொறியியல் கலந்தாய்வை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொறியி யல் படிப்பில் இடம் கிடைத்து அதன் பின்னர் எம்பிபிஎஸ் இடம் கிடைத்து மாணவர்கள் மாறிச்செல்லும் சூழலில் பொறியியல் இடங்கள் காலியாகி வீணாகும். இதை தவிர்க்க முடியாது. இதுபோன்ற பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான் அடுத்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் கலந்தாய்வு முறை கொண்டுவரப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

SCROLL FOR NEXT