சென்னை உயர் நீதிமன்றத்தில் சிட்டி யூனியன் வங்கியின் முன்னாள் ஊழியரான சீனிவாசன் தாக்கல் செய்த மனு: கடந்த 2017 மார்ச் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி இந்தியாவில் ரூ. 17 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் மோசடிகள் நடைபெற்றுள்ளது. இந்த மோசடியில் வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது.
இதுதொடர்பாக மொத்தம் 483 வழக்குகள் பதிவாகி உள்ளன. ஆனால் ஒரு வழக்கில்கூட புலன் விசாரணை நடைபெறவில்லை. எனவே வங்கி மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்த அனைத்து வங்கிகளிலும் தனி விசாரணை அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே வங்கி மோசடி தொடர்பாக விசாரிக்க தனி விசாரணை அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வறு அந்த மனுவில் கோரியிருந்தார்.
இதை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக மனுதாரர் அளித்த மனுவை சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.