திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (19-07-2017) தமிழக சட்டப்பேரவையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் சென்னை மாநகர் முழுவதும் விற்கப்படுவதை சட்டமன்றத்தில் எடுத்துக் காட்டிப் பேசினார்.
அதுகுறித்து சபாநாயகர் பேச அனுமதி மறுத்தது மட்டுமல்லாமல் உரிமை மீறல் பிரச்சினைக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவித்ததை கண்டித்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
சென்னை மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான பான் மசாலா, குட்கா போன்ற பொருட்கள் எல்லாம் தாராளமாக கிடைக்கின்றது. அப்படி கிடைப்பதற்கு இலஞ்சம் வாங்கிக் கொண்டு துணை நிற்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் இரண்டு காவல்துறை உயரதிகாரிகளுக்கு எல்லாம் மாமூல் தொடர்ந்து கொடுக்கப்படுகிறதென ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இப்பிரச்சினை குறித்து நாங்கள் சட்டமன்றத்தில் எழுப்பியபோது, அதனை முழுமையாக பேச முடியாத நிலைக்கு ஆளானோம். இன்று, சட்டமன்றத்தில் நீதித்துறை, நிதித்துறை, அரசு ஊழியர்கள் என பொதுவான பிரச்சினைகளை பேச ஒதுக்கப்பட்டிருக்கின்ற நாள், அதனைப் பயன்படுத்தி இன்று சட்டமன்றத்தில் பல பிரச்சினைகளை எழுப்பியிருக்கின்றேன்.
நிறைவாக நான் பேசுகிற போது, சென்னையில் பல நாட்களாக தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வரும் போதைப் பொருட்களை கடந்த இரண்டு மூன்று நாட்களாக நாங்கள் எந்தெந்த கடைகளில் விற்கப்படுகிறது என ஆய்வு செய்தோம். அந்த அடிப்படையில் நேரு விளையாட்டரங்கம் அருகில் அமைந்திருக்கின்ற வேப்பேரி ஹை ரோடு ராஜா ஹோட்டல், அழகப்பா ரோட்டில் உள்ள அசோக் பவன் ஹவுஸ், ஈ.வி.கே.சம்பத் சாலையில் அமைந்துள்ள அருள்மாதா தேனீர் விடுதி, பிக்ளின் ரோடு ஓட்டேரி சத்யா ஹோம் அப்ளையண்ஸ் எதிரில் உள்ள செளத்ரி ஷாட்ஸ், பூந்தமல்லி ரோடு அருகில் உள்ள காஜா ஹோட்டல் என இந்த இடங்களில் எல்லாம் குட்கா பவுடர் விற்கப்படுகிறதென ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது.
ஒரு பெண் போதைப்பொருட்கள் விற்கின்ற புகைப்படம் மட்டுமல்லாமல், சிறு சிறு குழந்தைகளே விற்கும் காட்சிகள் எல்லாம் இருக்கின்றது. இவ்வளவு ஆதாரங்களையும் கையில் வைத்துக்கொண்டு சட்டமன்றத்தில் பேச முயன்றபோது சபாநாயகர் அவர்கள் எங்களுக்கு பேச அனுமதி மறுத்து விட்டார். ஆகவே இதனை முழுமையாக எங்களால் பேச இயலவில்லை. சபாநாயகர் பேசுகிறபோது, எந்தவித ஆதாரமும் இல்லாமல் இதைக்கொண்டு வந்து நீங்கள் பேசுவது தவறு, ஆகவே உரிமை மீறல் பிரச்சினைக்கு அனுப்பி வைக்கிறோம் என்று சொல்கிறார்.
இந்த பிரச்சினையில் காவல்துறை உயரதிகாரிகளே துணை போயிருக்கிறார்கள். HM என்று சொல்லக்கூடிய Health Minister விஜயபாஸ்கரே இலஞ்சம் வாங்கிக் கொண்டு உடந்தையாக இருந்திருக்கிறார். நியாயமாக பார்த்தால், இந்தப் பிரச்சினையில் சிக்கியுள்ள இவர்கள் மீது விசாரணை நடத்தி சிறையில் அடைத்து தண்டனை பெற்றுத் தந்திருக்க வேண்டும். ஆனால் இதனை அம்பலப்படுத்துகிற எங்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை தொடுப்போம் என அறிவிக்கிறார். அதனை சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் அது வேறு.
ஆதாரத்தை நாங்கள் தருகிற போது, இது எப்படி உங்களுக்கு கிடைத்தது என முதலமைச்சர் கேட்கிறார். நான் சொன்னேன், காவல்துறை உயரதிகாரிகள், அமைச்சர் என ஆட்சியே இலஞ்சம் வாங்கிக் கொண்டு இந்த விற்பனைக்கு எல்லா விதமான வசதிகளையும் செய்துகொடுத்து துணை நிற்கிறது, ஆகவே எப்படி எங்களுக்கு கிடைக்காமல் இருக்கும்?
அந்த அடிப்படையில் தான் நாங்கள் இன்றைக்கு பெற்று, சபையில் காட்ட வேண்டுமென கொண்டு வந்தோமே தவிர வேறெந்த நோக்கமும் இல்லை.
இது எப்படி கிடைத்தது? எங்கே கிடைத்தது? என கேட்டு நியாயமாக அவர்கள் மீது தான் அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், எங்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆகவே, ஆதாரங்களோடு பிரச்சினையை எடுத்துச் சொல்ல எங்களுக்கு அனுமதி கிடைக்காததால் நாங்கள் வெளிநடப்பு செய்துவிட்டு வந்திருக்கிறோம்
கேள்வி: தடை செய்யப்பட்ட பொருள் ஒன்று கிடைத்தால் அதை நியாயமாக காவல் நிலையத்தில் தானே புகார் கொடுக்க வேண்டுமென முதலமைச்சர் கூறியிருக்கிறாரே?
ஸ்டாலின்: காவல்துறை அதிகாரிகளே இலஞ்சம் பெற்றுக் கொண்டு, திருடர்களாக இருக்கின்ற போது நாங்கள் எப்படி காவல்நிலையத்தில் கொடுக்க முடியும்?
இவ்வாறு தெரிவித்தார் ஸ்டாலின்.