கோவை மாநகரில் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வசதியாக, கட்டுப்பாட்டுக் கருவியுடன் கூடிய சிக்னல்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன.
வளர்ந்து வரும் நகரமான கோவையில் வாகன எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப போக்குவரத்து வசதிகளையும் மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு கோவையின் போக்குவரத்து முக்கியத்துவம் மிக்க சாலையான அவிநாசி சாலையில் ‘கிரீன் காரிடார்’ திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இதில் சீரான வேகத்தில் வாகனத்தை இயக்கினால் அடுத்தடுத்து 10-க்கும் மேற்பட்ட சிக்னல்களை நிற்காமல் கடந்து செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து நெருக்கடி உள்ள சிக்னல்களில் இத்திட்டம் பயனளிக்கவில்லை. அதன் பிறகு முக்கியமான சந்திப்புகளில் உள்ள சிக்னல்களை போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப இயக்குவது சவாலாக இருந்தது.
இந்நிலையில், இப்பிரச்சினைக் குத் தீர்வு காணும் வகையில், தானியங்கி முறையில் இயங்கிய சிக்னல்களை, போக்குவரத்துக்கு ஏற்ப போலீஸாரே இயக்கும் வகையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய வகை கட்டுப்பாட்டுக் கருவியை போலீஸார் ஒவ்வொரு சிக்னல்களிலும் பொருத்தி வருகின்றனர். அதில் ஒருபகுதி இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
கோவை மாநகரப் பகுதியில் மொத்தம் 56 சிக்னல்கள் இயக்கப்படுகின்றன. அதில் முதல்கட்டமாக அவிநாசி சாலை, காந்திபுரம், மேட்டுப்பாளையம் சாலை என போக்குவரத்து அதிகமுள்ள 18 சிக்னல்களில் இந்த கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸார் கூறும்போது, ‘சிக்னல்களை தானியங்கி முறையில் இயக்குவதால், நிர்ணயிக்கப்பட்ட நேரம் வரை வாகனங்கள் அதில் கடந்து செல்ல முடியும். பல நேரங்களில் சிவப்பு விளக்கு காட்டப்படும் சாலையில் வாகனங்கள் அதிகமாக காத்திருப்பதும், பச்சை விளக்கு போட்டு திறக்கப்படும் சாலையில் வாகனங்களே இல்லாமல் இருப்பதும் உண்டு. அப்படியான சமயங்களில் சிக்னலை மாற்றிவிட முடியாது. ஆனால் இந்த புதிய கட்டுப்பாட்டுக் கருவி மூலம், வாகன போக்குவரத்துக்கு ஏற்ப, சிக்னல் சமிக்ஞைகளை மாற்றி சாலைகளைத் திறந்துவிட முடியும். குறிப்பாக முக்கிய பிரமுகர்கள், ஆம்புலன்ஸ் வருகை போன்றவற்றின்போது சிக்னல்களை மாற்றி, அவற்றை செல்ல அனுமதிக்க முடியும். மற்ற நேரங்களில் தானியங்கி முறையில் இயக்கலாம். இதனால் வாகன ஓட்டிகளின் எரிபொருள், நேரம் மிச்சமாகும்’ என்றனர்.
கோவை மாநகரில் உள்ள 28 சிக்னல்கள் யுபிஎஸ் (மின்கலன்) பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தடையின்றி இயங்கும் வகையில் பராமரிக்கப்படுகின்றன. மீதமுள்ளவற்றையும் இதேபோல மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.