தமிழகம்

கதிராமங்கலம் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறுக: முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை

செய்திப்பிரிவு

கைது செய்யப்பட்ட கதிராமங்கலம் பொதுமக்களையும், விவசாயிகளையும் உடனடியாக விடுதலை செய்து, அவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கதிராமங்கலத்தை தனி தீவு போல் துண்டாக்கி அங்கு வாழும் மக்கள் மீதும், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீதும் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி அராஜகமாக கைது செய்திருப்பதற்கும், அக்கிராமத்தையே போர் பகுதி போல் அறிவித்து ஆயிரக்கணக்கில் போலீஸாரை குவித்து வைத்திருப்பதற்கும் திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

திடீரென ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் குழாய்கள் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு மக்கள் கொதித்து எழுந்ததை காவல்துறை கொண்டு அடக்க நினைப்பது ஆளுகின்ற அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை காட்டுகிறது.

அந்த கிராமத்தில் தொடர்ந்து நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டு கொள்ளாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, போலீஸ் அதிகாரிகள் சிலரை வைத்துக்கொண்டு பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக, குறிப்பாக பெண்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது மனித உரிமை மீறிய செயல் மட்டுமல்ல- ஜனநாயக உணர்வுகளை நசுக்கும் முயற்சியாகும்.

ஆபத்தான விபத்து ஒன்று நடந்த பிறகுகூட கவலையில் உள்ள அந்த மக்களை சந்தித்து ஆறுதல் சொல்ல முடியாத அதிமுக அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகளை ஏவி விட்டு இப்படி ஜனநாயக ரீதியான போராட்டங்களை அடக்குவது வேதனைக்குரியது.

தமிழக அரசு நிர்வாகம் மட்டுமல்ல இன்றைக்கு காவல்துறை நிர்வாகமும் அதிமுக ஆட்சியில் படாத பாடுபடுகிறது. அரசோ ஓ.என்.ஜி.சி. போன்ற மத்திய அரசு நிறுவனங்களுக்கும் ஏஜெண்டாக மாறி தன் சொந்த மக்கள் மீதே காவல்துறையை வைத்து தடியடி நடத்தும் கொடுமையான காரியத்தை செய்திருக்கிறது.

ஏற்கெனவே சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு முன்பு எப்போதோ நடத்திய போராட்டத்திற்காக திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பிறகு புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடுவோர் மீது அங்குள்ள போலீஸாரை ஏவி விட்டு அடக்குமுறை நடத்தப்பட்டது. இப்போது தஞ்சாவூரில் உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஏவலாளியாக நின்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மீது அறிவிக்கப்படாத போரை நடத்தி வருகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகள் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார்கள் என்று வெளிவந்துள்ள செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

ஆகவே கைது செய்யப்பட்ட கதிராமங்கலம் பொதுமக்களையும், விவசாயிகளையும் உடனடியாக விடுதலை செய்து, அந்த கிராமத்தில் முற்றுகையிட்டுள்ள போலீஸார் அனைவரையும் அங்கிருந்து வெளியேற உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன்.

அக்கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்த்து, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை திரும்பப் பெறுவதோடு, ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பணிகளால் மக்களின் பாதுகாப்பிற்கும், சுற்றுப் புறச்சூழலுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாதவாறு தடுத்து நிறுத்திட வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT