தமிழகம்

போரூர் ஏரியை பாதுகாக்க விழிப்புணர்வு: அறப்போர் இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது

செய்திப்பிரிவு

சுருங்கிவிட்ட போரூர் ஏரியை பாதுகாக்க அறப்போர் இயக்கம் சார்பில் நேற்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது போரூர் ஏரி. சென்னையின் புறநகர் பகுதிகளின் நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியின் மொத்த பரப்பு 800 ஏக்கர். ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் 330 ஏக்கராக சுருங்கிவிட்ட இந்த ஏரியை பாதுகாக்க பொதுமக்கள் மத்தியில் நேற்று அறப்போர் இயக்கத்தினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

போரூர் சிக்னல் அருகே தனியார் திருமண மண்டப வளாகத்தில் நடந்த இந்த நிகழ்வில், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், மாநிலக் குழு உறுப்பினர்களான ஹாரீஸ் சுல்தான், பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், போரூர் ஏரியின் முந்தைய நிலை, தற்போதைய நிலை மற்றும் அதன் முக்கியத்துவம், பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கருத்துகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

குறிப்பாக, போரூர் ஏரியின் முழு கொள்ளளவுக்கு தூர்வாரப்பட வேண்டும். மேம்பாலத்துக்கு கீழ் உள்ள தற்காலிக சாலை அகற்றப்பட்டு, இரு பகுதிகளாக உள்ள ஏரியை இணைக்க வேண்டும். ஏரியின் எல்லைகளை வரையறுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். போரூர் ஏரிக்குள் வாகனங்கள், மனிதர்கள் மற்றும் விலங்குகள் சென்று அசுத்தப்படுத்துவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT