‘‘ஜிஎஸ்டி வரிவிதிப்பு நிரந்தர மல்ல; மாதத்தின் முதல் சனிக் கிழமைகளில் நடக்கும் ஜிஎஸ்டி கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும்’’ என்று நிதியமைச்சர் டி.ஜெயக் குமார் சட்டப்பேரவையில் தெரி வித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதம்:
இ.ராமர் (திமுக):
வரி விதிப்பு என்பது மென்மையாக இருக்க வேண்டும். தேனீ போல் கொட்டக் கூடாது.
அமைச்சர் கே.சி.வீரமணி:
ஜிஎஸ்டி மத்திய அரசு கொண்டு வந்தது. மாநில அரசு கொண்டு வரவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்:
ஜிஎஸ்டி குறித்து ‘வாட்ஸ் அப்’ பில் பதிவு ஒன்று வந்துள்ளது. அதில், ‘கடை வைத்து உழைக்கும் எனக்கு 10 சதவீதம் லாபம் வருகிறது. ஒன்றுமே செய்யாத அரசுக்கு 28 சதவீதம் வரி கட்ட வேண்டுமா? என் 10 சதவீதம் லாபத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; 28 சதவீதம் வரியை எனக்கு தாருங்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன்:
ஜிஎஸ்டி முதன் முதலில் கொண்டுவரப்பட்ட போது அதை ஆதரித்தது நீங்கள்தானே?
மு.க.ஸ்டாலின்:
ஆதரித்தது நாங்கள்தான். தற்போது ‘செலக்ட்’ கமிட்டிக்கு அனுப்ப வேண்டும் என்று கூறியபோது நீங்கள் அனுப்பவில்லையே. சம்பந்தப் பட்ட தொழில்பிரிவினருடன் பேசி அவர்கள் கருத்துகளை அறிய வேண்டும்.
அமைச்சர் டி.ஜெயக்குமார்:
ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் இணைந்துதான் வரி விதிப்பு, நீக்கம் குறித்து முடிவெடுக்கப்படுகிறது. பல பொருட்கள் மீதான வரி நீக்கம், வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. 143 பொருட்கள் மீதான வரி நீக்கப்பட்டுள்ளது. எனவே ‘வாட்ஸ் அப்’பில் வருவதைக் கொண்டு இங்கு பேசக்கூடாது. மாநில அரசின் சுயாட்சி, நிதி தன்னாட்சியை பாதிக்கும் விஷயங்களை மாற்ற வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி விதிப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாநிலத்தின் உரிமை, 12 கடல்மைல் தொலைவுக்குள் வரிவிதித்தல் ஆகியவற்றை மத்திய அரசு ஏற்றதால்தான் நாங்கள் அமல்படுத்தினோம். இந்த வரி விதிப்பு என்பது நிரந்தரமல்ல. மாறுபட்ட கருத்துகள் வருகின் றன. மாதத்தின் முதல் சனிக் கிழமைகளில் நடக்கும் ஜிஎஸ்டி கூட்டத்தில் இது தொடர்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும்.
ராமர்:
முதலில் 589 பொருட்கள் மீது வரி இல்லை. தற்போது அவற்றில் 530 பொருட்கள் மீது 5, 12, 18, 28 சதவீதம் வரி விதிக் கப்பட்டுள்ளது. குடிநீருக்கு 12 சதவீதமும், மக்கள் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு 28 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. பல் வேறு வெளிநாடுகளில் ஒரே விதமான வரி விதிப்பு உள்ளது.
அமைச்சர் வீரமணி:
எந்த பொருளுக்கு வெளிநாடுகளில் ஒரே விதமான வரி என்பதை தெரிவிக்க வேண்டும்.
அமைச்சர் டி.ஜெயக்குமார்:
தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு குறைவாக ஆண்டு வரவு செலவு உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை. அதிலிருந்து ரூ.75 லட்சம் வரை வரவு செலவு செய்பவர்கள் 1, 2, 5 சதவீதம் என வரி செலுத்த வேண்டிவரும்.