நீதிமன்றத்துக்கு எதிராகப் போராடினால் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று ஆசிரியர் சங்கங்களுக்கு நீதிபதி கிருபாகரன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி மறுத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூன் 27-ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார்.
அப்போது அவர், ''அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்காதது ஏன்? அதை அரசு கட்டாயமாக்காதது ஏன்? கிராமப்புற, மலைப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காலதாமதமாக வரு வதை கண்டறிய ஏன் பயோ-மெட்ரிக் எனப் படும் கைவிரல் ரேகைப் பதிவு இயந்திரத்தை பொருத்தக் கூடாது? குறித்த நேரத்துக்கு வராத ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஆசிரியர்கள் சங்கங்கள் தொடங்குவதை ஏன் தடை செய்யக்கூடாது?'' என்பன உள்ளிட்ட 20 கேள்விகளை அரசிடம் எழுப்பியிருந்தார்.
அதைத் தொடர்ந்து சில ஆசிரியர் சங்கங்கள் நீதிபதி கிருபாகரனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தன.
இந்நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்த 42 மாணவர்கள் 9-ம் வகுப்பு இறுதித் தேர்வில் தோல்வியடைந்ததாக அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரித்த நீதிபதி கிருபாகரன்,
''நீதிமன்றத்துக்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்துவது முறையா? நீதிமன்றங்கள் பொது நல நோக்கத்தோடு உத்தரவுகள் பிறப்பிப்பது ஆசிரியர் சங்கங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான். அதைத்தான் சுட்டிக்காட்டியிருக்கிறோம். அதற்காக உயர் நீதிமன்றத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துவீர்களா?
அவ்வாறு நடத்தப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்'' என்று கூறியுள்ளார்.