5 ஆண்டு ஆனர்ஸ் சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கலந் தாய்வு ஒதுக்கீடு ஆணை நேற்று வழங்கப்பட்டது. முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 12-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் பிஏ.எல்எல்பி, பிபிஏ.எல்எல்பி, பிகாம்.எல்எல்பி, பிசிஏ.எல்எல்பி ஆகிய 5 ஆண்டு கால ஆனர்ஸ் சட்டப் படிப்புகள் உள்ளன. ஒவ்வொரு படிப்பிலும் தலா 133 இடங்கள் உள் ளன.
நடப்பு கல்வி ஆண்டில் இப்படிப்புகளில் சேர 2,924 மாணவ - மாணவிகள் விண்ணப் பித்தனர். அவர்களில் 2,515 பேரின் விண்ணப்பங்கள் தகுதியானவையாக ஏற்றுக்கொள் ளப்பட்டன. கடந்த ஜூன் 27-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளி யிடப்பட்ட நிலையில், பாடப்பிரிவை தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வு சென்னை அடையாரில் உள்ள சட்டப் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. தரவரிசைப் பட்டியலில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணையை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், சட்டத்துறை செயலர் எஸ்.எஸ்.பூவலிங்கம், சட்டக் கல்வி இயக்குநர் என்.எஸ்.சந்தோஷ்குமார், சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) வி.பாலாஜி, இளங்கலை படிப்புகள் இயக்குநர் எஸ்.நாராயண பெருமாள், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் சி.சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தரவரிசைப்பட்டியலில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையை வழங்கிய பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில், “சட்டப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வுசெய்வதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. புதிய துணைவேந்தர் நியமனம் பற்றிய அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும்” என்றார்.
கலந்தாய்வு முடிய சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படுவதாகவும், முதல் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஜூலை 12-ம் தேதி தொடங்கப்படும் என்றும் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர் பாலாஜி தெரிவித்தார்.