தமிழகம்

11 நாட்களுக்கு பிறகு கதிராமங்கலத்தில் கடைகள் திறப்பு

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் நேற்று 2-வது நாளாக கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு 11 நாட்களுக்குப் பிறகு நேற்று கடைகள் திறக்கப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் முழுமையாக வெளியேற வேண்டும். இதற்காக நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 10 பேரையும் எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த கடையடைப்புப் போராட்டம், பொதுமக்கள் நலன் கருதி நேற்று விலக்கிக் கொள்ளப்பட்டது. எனினும் நேற்று 2-வது நாளாக பொதுமக்கள் அய்யனார் கோயில் வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஸ் அடுப்பை புறக்கணித்து நேற்றும் விறகு அடுப்பில் சமைத்து சாப்பிட்டனர்.

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள் நேற்று கதிராமங்கலத்துக்குச் சென்று, மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன், போராட்டத்தில் பங்கேற்றனர்.

கதிராமங்கலத்தில் எண்ணெய்க் கிணற்றில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்ததால், அப்பகுதியைச் சேர்ந்த ராம் என்பவரது வயல் பாதிப்புக்குள்ளானது. இதற்கான இழப்பீடாக, ஓஎன்ஜிசி நிர்வாகம் ரூ.59,635-க்கு காசோலையை ராமுக்கு அனுப்பியுள்ளது.

SCROLL FOR NEXT