தமிழகம்

பாஜக தலைவர் அமித் ஷா சென்னைக்கு வருகை

செய்திப்பிரிவு

பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்ற அமித் ஷா முதல் முறையாக நேற்று சென்னை வந்தார். தமிழக பாஜகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் சென்னை வருவதாக சில மாதங்களுக்கு முன்பு கூறப்பட்டது.

ஆனால் பொதுக்குழு கூட்டத்தின் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது வருகையும் தள்ளிப்போனது. இந்நிலையில் பாஜகவினரிடம் கூட சொல்லாமல் திடீரென நேற்று முன்தினம் இரவு அமித் ஷா சென்னை வந்தார்.

சென்னையில் கண் சிகிச்சை பெற்று வரும் தனது சகோதரியை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக அவர் சென்னை வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கண் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தனது சகோதரியை பார்ப்பதற் காக அமித் ஷா சென்னைக்கு வந்திருந்தார். கட்சி நிர்வாகிகள் யாரையும் பார்க்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.

மேலும் நேற்று காலை 7.30 மணியளவில் மருத்துவமனைக்கு சென்ற அவர், 10.30 மணியளவில் மீண்டும் தான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு திரும்பினார். கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திக்காத அவரை, ஆடிட்டர் குருமூர்த்தி, அவர் தங்கியிருந்த ஓட்டலில் மாலையில் சந்தித்து சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் பேசினார்.

அமித் ஷா நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி திரும்பினார். அவரை பாஜக தலைவர்கள் தமிழிசை சவுந்தர ராஜன், இல.கணேசன் வழியனுப்பி வைத்தனர்” என்றனர்.

SCROLL FOR NEXT