தமிழக காவல்துறைக்கு தலைமை இயக்குநரை (டிஜிபி) உடனடியாக நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகக் காவல்துறையின் தலைமை இயக்குநராக இருந்த அசோக் குமார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விருப்ப ஓய்வு என்ற பெயரில் கட்டாயமாக பதவி விலக்கப்பட்டார். அதன்பின்னர் அவருக்குப் பதிலாக புதிய தலைமை இயக்குநர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் ஒருவரிடம்தான் அப்பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் கருதியதால் கடந்த 10 மாதங்களாக காவல்துறை தலைமை இயக்குநர் பத விக்கு யாரும் நியமிக்கப் படவில்லை.
மாறாக, இப்போதுள்ள அதிகாரிகளில் பணி அனு பவத்தில் மிகவும் இளை யவர் என்று கூறப்படும் டி.கே.ராஜேந்திரன் உள வுப் பிரிவின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டு, சட்டம் - ஒழுங்கு பிரிவு தலைமை இயக்குநர் பதவி அவருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. அவர் இம்மாதம் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், புதிய காவல்துறை தலைமை இயக்குநர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் டி.கே.ராஜேந்திரனுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
இதனால் தமிழக காவல்துறை தலைமை இல்லாமல் மேலும் 3 மாதங்கள் செயல்பட வேண்டும். இது தமிழக காவல்துறையின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக பாதிக்கும்.
கடந்த 6 ஆண்டுகளில் 25 மாதங்கள் காவல் துறை தலைமை இல்லாமல் இருந்திருக்கிறது. இனியும் இந்த நிலை தொடரக்கூடாது. எனவே, காவல்துறைக்கு தகுதியும், திறமையும் உள்ள ஒருவரை புதிய தலைமை இயக்குநராக உடனடியாக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.