தமிழகம்

வறட்சி அதிகரித்ததால் வாழை விவசாயம் பாதிப்பு: வரத்து குறைவால் உச்சத்தில் வாழைத்தார் விலை

செய்திப்பிரிவு

தென்மாவட்டங்களில் வறட்சியின் தாக்கம் அதிகரித்ததால் வாழை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைவால் வாழைத்தார்கள் வத்தலகுண்டு மொத்த சந்தையில் அதிக விலைக்கு விற்பனையாகின.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் பிரசித்தி பெற்ற வாழைச்சந்தை உள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வாழைத்தார்கள் வத்தலகுண்டிற்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

தென்மாவட்டங்களில் கடும் வறட்சி காரணமாக வாழை விவ சாயம் படிப்படியாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில், வத்தலகுண்டு சந்தைக்கு குறைந்த அளவில் வந்த வாழைத்தார்கள் நேற்று அதிக விலைக்கு விற்கப்பட் டன. சில வாரங்களுக்கு முன்பு ரூ.200-க்கு விற்கப்பட்ட ஒரு தார் பூவன் வாழை, நேற்று 700 ரூபாய்க்கு விற்பனையானது. ரூ.400-க்கு விற்ற ரஸ்தாளி வாழைத்தார் ஒன்று நேற்று ரூ.600-க்கு விற்பனையானது. ரூ.300-க்கு விற்பனையான கற்பூரவள்ளி வாழைத்தார் ஒன்று ரூ.700-க்கு விற்பனையானது.

ஒட்டுநாடு வாழை சில வாரங் களுக்கு முன்பு ரூ.100-க்கு விற்பனையானது நேற்று 500 ரூபாய்க்கு விற்பனையானது. ஆடி மாதம் தொடங்கிய நிலையில் கோயில் வழிபாட்டிற்கு மக்கள் அதிக அளவில் வாங்கிச் செல்வர் என்பதால் வாழைத்தார்கள் விலை அதிகரித்துள்ளது.

இது குறித்து வத்தலகுண்டில் உள்ள வாழை கமிஷன் கடை உரிமையாளர் ஜாய்ஸ்டன் கூறிய தாவது: தென் மாவட்டங்களில் கடும் வறட்சி காரணமாக வாழைத்தார்கள் விலை அதிகரித்துள்ளது. ஆடி மாதத்தில் கிராமங்களில் கோயில் திருவிழாக்கள் அதிகமாக இருக் கும் என்பதால் தேவையும் அதிகரித்துள்ளது. ஆடி மாதம் முடியும் வரை இந்த விலை ஏற்றம் தொடரும். ஆந்திராவில் இருந்து வாழைத்தார்கள் வரத்துவங்கினால் தான் விலை குறைய வாய்ப்புள் ளது. கோயில்களில் வழிபாடு நடத்த பூவன் பழங்கள் அதிக அளவில் பயன்படுத்துவர் என்பதால் இதன் விலை ரூ.200-ல் இருந்து அதிகபட்சமாக ரூ.700 வரை அதிகரித்துள்ளது என்றார்.

வத்தலகுண்டு வாழைச்சந்தையில் குறைந்த அளவே விற்பனைக்கு வந்த வாழைத்தார்கள்.

வாழைக்காய் பஜ்ஜிக்கு சிக்கல்

வறட்சியால் வரத்து குறைவு காரணமாக பஜ்ஜி தயாரிக்கப் பயன்படும் ஒட்டுரக வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது. விலை அதிகம் காரணமாக ஒட்டுரக வாழைக்காய் ஒன்று வெளிமார்க்கெட்டில் ஆறு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை விற்பனையாகிறது. இதை வாங்கி பஜ்ஜி போடுவது கடைக்காரர்களுக்கு கட்டுபடியாகாதநிலை உள்ளது. விலை உயர்வுடன் ஒட்டுரக வாழைக்காய்க்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் பஜ்ஜி தயாரிக்க ஒட்டுரக வாழைக்காயை பன்படுத்துவதை தவிர்த்து உருளைக் கிழங்கு மற்றும் அப்பளத்துக்கு மாறத் தொடங்கி உள்ளனர்.

SCROLL FOR NEXT