தமிழக ஆறுகளில் மணல் அள்ளு வதையும், வணிகப் பயன்பாட்டுக் காக அதிக அளவில் நீரை உறிஞ்சி எடுத்து விற்பதையும் அரசு கைவிட்டால்தான் வறட்சியைப் போக்க முடியும் என்று ‘இந்தியா வின் தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங் கூறினார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் வறட்சியைப் போக்க செயல்திட்டம் வகுக்கும் விதமாக கடந்த 27-ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி ஆகிய ஆறுகளையும், அவை வறண்டு கிடக்கும் நிலையும் பார்த்தேன்.
சிந்தனையில்தான் வறட்சி
ராஜஸ்தான் மாநிலத்துக்கு இணையாகத்தான் தமிழக மக்கள் தொகை உள்ளது. ஆனால் ராஜஸ் தானின் இயல்பான மழைப் பொழிவை விட 6 மடங்கு அதிக மாக தமிழகத்தில் பெய்கிறது. இருப்பினும் இங்கு வறட்சி நிலவுவது வேதனை அளிக்கிறது. தமிழகத்தின் இந்த வறட்சிக்கு காரணம், இயற்கையோ, பருவ மழை பொய்த்ததோ அல்ல. தமிழக மக்களின், ஆளும் அரசியல் வாதிகளின் சிந்தனையில்தான் வறட்சி ஏற்பட்டுள்ளது.
சுற்றுப்பயணத்தின்போது, வேலூர் மாவட்டம் ராணிப்பேட் டையில் பாலாறு ஆற்றங்கரையோர விவசாயிகளுடன் பேசினேன். அப் பகுதியில் ரசாயன தொழிற்சாலை இயங்கியதும், அதை எதிர்த்து மக்கள் போராடி 35 ஆண்டுகளுக்கு முன்பே அந்த ஆலை மூடப் பட்டதும், அதனால் ஏற்பட்ட பாதிப்பு கள் இன்றும் நீங்காமல் இருப்பதும் தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள ஆற்றில் குரோமியம், பாதரசம் போன்ற நச்சுப் பொருட்கள் இன்னமும் கலந்துள்ளன.
மணல் அள்ளுவதால்...
பல ஆறுகளில் அதிக அளவில் மணல் அள்ளப்பட்டிருக்கின்றன. ஆறுகளில் இருந்து வணிகப் பயன்பாட்டுக்காக, பன்னாட்டு குளிர்பானத் தொழிற்சாலைகளுக்கு அதிகப்படியாக நீரை உறிஞ்சுகின்ற னர். இவ்வாறு செய்வதால், மழைக் காலத்தில் கிடைக்கும் நீர், நீர்த் தாங்கிகளைச் சென்றடையாது. வீணாக கடலில் சென்று கலந்து விடும். இது தொடர்ந்தால், இப் போது கிடைக்கும் நிலத்தடிநீர்கூட வருங்காலத்தில் கிடைக்காது. அது மட்டுமின்றி, உணவுச் சங்கிலி, மனித வாழ்க்கை முறை, சுற்றுச் சூழல் ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும். மேலும் கடுமையான வறட்சி ஏற்படும்.
ஆறுகள் இணைப்பு தீர்வல்ல
எனவே, தமிழகத்தில் வறட்சி ஏற்படுவதை தடுக்க வேண்டு மானால், ஆறுகளில் மணல் அள்ளுவதையும், வணிகப் பயன் பாட்டுக்கு நீர் உறிஞ்சி விற்பதையும் அரசு கைவிட வேண்டும். கிடைக் கும் மழைநீர் மற்றும் நிலத்துக்கு ஏற்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட வேண்டும். நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க வேண்டும். தமிழகத்தை வறட்சி யற்ற மாநிலமாக மாற்றுவதில் பொதுமக்களும் ஆர்வத்தோடு கைகோக்க வேண்டும். ஆறுகள் இணைப்பு என்பது வறட்சியைப் போக்குவதற்கான தீர்வு அல்ல. அதனால் எந்தப் பயனும் இல்லை. கிடைக்கும் மழைநீரை சேமித்து, பயன்படுத்தினாலே, வறட்சியை ஒழிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக ஆறுகளின் வளம் மீட்பு இயக்கத்தைச் சேர்ந்த த.குருசாமி, உலகத் தமிழர் அறக்கட்டளை நிறுவனர் சி.துரைசாமி, தேசிய மக்கள் இயக்க கூட்டமைப்பு தலை வர் வளையோடி வேணுகோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.