நடப்பு ஆண்டு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் பெய்ய வேண்டிய மழை வழக்கம்போல நாடு முழுவதும் சராசரியாக உள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை ஜூன் முதல் வாரம் தொடங்கி செப்டம்பர் வரை பெய்யும். இந்த ஆண்டில் தென்மேற்குப் பருவமழையின்போது நாடு முழுவதும் சராசரியாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படியே, ஜூன் 1 முதல் 18 வரையிலான நிலவரப்படி நாடு முழுவதும் சராசரியாக மழை பெய்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் நீண்டகால சராசரி மழை அளவு 328.4 மி.மீ. ஆனால் சற்று அதிகமாக 329.2 மி.மீ. பெய்துள்ளது.
தமிழகத்துக்கு காவிரி ஆற்றின் மூலமே அதிகம் தண்ணீர் கிடைக்கிறது. காவிரி நீர்பிடிப்புப் பகுதிகள் பெரும்பாலும் கர்நாடக மாநிலத்தில் இருப்பதால், தமிழகத்தின் தேவைக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றால் அந்தப் பகுதிகளில் அதிக மழை பெய்ய வேண்டும்.
ஆனால், காவிரி நீர்பிடிப்புப் பகுதிகள் அமைந்துள்ள தெற்கு கர்நாடக பகுதியில் ஜூலை 18 வரை 38 சதவீத பற்றாக்குறை மழை பெய்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் அப்பகுதியில் 269.7 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 167.5 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. இனிவரும் காலங்களில் கர்நாடகாவில் அதிக மழைப்பொழிவு இருந்தால் மட்டுமே எதிர்காலத்தில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்.
கடந்த ஆண்டு ஜூலை 13-ம் தேதி வரையிலான நிலவரத்தைப் பொறுத்தவரை, அப்பகுதியில் 12 சதவீதம் கூடுதலான மழை பெய்தது. அதேவேளையில் பருவமழைக் காலம் முழுவதும் பெய்த மழையைக் கணக்கிடும்போது, 21 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையே பிரதான பருவமழைக் காலம். ஆனாலும் தற்போது வரையிலான நிலவரப்படி 82.2 மி.மீ. மழை பெய்யவேண்டிய நிலையில், 68.6 மி.மீ. மழை பெய்துள்ளது. இது 17 சதவீதம் குறைவு.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யாவிட்டால், தமிழகத்துக்கு நீர் திறக்க கர்நாடக அரசு மறுக்கும். அதை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளை தமிழக அரசு இப்போதே தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.