கொடுங்கையூரில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 30 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீ விபத்தில் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிலர் புறநோயாளிகள் பிரிவில் முதல்கட்ட சிகிச்சை பெற்றுச் சென்றனர். சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 20 பேரும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 10 பேரும் தீக்காய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 20 பேரில் 16 பேருக்கு 40 சதவீதத்துக்கும் அதிகமாக தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதில் பரந்தாமன் (67) என்பவருக்கு 82 சதவீத தீக்காயம் உள்ளது. 47 சதவீதம் தீக்காயம் அடைந்துள்ள முனிஷ் (11) என்ற சிறுவன் செயற்கை சுவாசத்தில் உள்ளார். பாஸ்கர் (38) என்பவருக்கு 65 சதவீத தீக்காயமும், முகில் வாணன் (19) என்பவருக்கு 63 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மாதவன் (36) என்பவருக்கு மட்டும் 38 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் நிர்மலா தலைமையிலான 12 டாக்டர்கள் மற்றும் 35 செவிலியர்கள் கொண்ட குழுவினர் தீக்காயம் அடைந்தவர்களை கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள டீன் பொன்னம்பல நமச்சிவாயம் தலைமையிலான குழுவினர் தீக்காயம் அடைந்த 10 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.
இந்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று தீக்காயத்துக்காக சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது மருத்துவமனை டீன் வசந்தாமணி உடன் இருந்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.