தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்: 2 பெண்கள் உட்பட 7 பேருக்கு அபராதம்

செய்திப்பிரிவு

சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப் பட்டது. 2 பெண்கள் உட்பட 7 பேருக்கு அபராதம் விதிக்கப் பட்டது.

மலேசிய தலைநகர் கோலாலம் பூரில் இருந்து ஒரு விமானம் சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு 10.40 மணிக்கு வந்தது. விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த மன்சூர் (30) என்பவர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மருத்துவக் குழுவினரின் உதவியோடு அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது, வயிற்றுக்குள் நிறைய கேப்சூல் வடிவிலான மாத்திரைகள் இருப் பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு இனிமா கொடுத்து வயிற்றில் இருந்த 38 கேப்சூல் களை வெளியே எடுத்தனர். அந்த கேப்சூல்களைப் பிரித்து பார்த்த போது, அதில் தங்கத்தை பொடி யாக்கி அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 380 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12.10 மணிக்கு சென்னைக்கு வந்த சிங்கப்பூர் விமானத்தில் பயணித்த கடலூரைச் சேர்ந்த முகமது (34) என்பவர் உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 470 கிராம் தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னைக்கு நேற்று அதிகாலை 3 மணிக்கு வந்த கொழும்பு விமானத்தில் பயணித்த சென்னையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (45), முகைதீன் (50), லட்சுமி (44), பானு (48) ஆகியோர் அணிந்திருந்த 600 கிராம் புதிய தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னைக்கு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வந்த அபுதாபி விமானத்தில் பயணித்த ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த வேலு (40) என்பவர் கொண்டுவந்த சிறிய அளவிலான மோட்டாருக்குள் மறைத்து வைத்திருந்த 550 கிராம் தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை மறைத்து எடுத்துவந்த 2 பெண்கள் உட்பட 7 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை ரூ.60 லட்சம் மதிப்புள்ள சுமார் 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT