தமிழகம்

பத்திரப்பதிவு வருவாய் உயரும்போது பதிவுக் கட்டணம் குறைக்கப்படும்: அமைச்சர் வீரமணி உறுதி

செய்திப்பிரிவு

பத்திரப்பதிவு வருவாய் உயரும்போது பதிவுக் கட்டணம் குறைக்கப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று வணிக வரி, பதிவுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் குளித்தலை தொகுதி திமுக எம்எல்ஏ ராமர் பேசும்போது, ‘‘பத்திரப்பதிவுத் துறையில் பதிவுக் கட்டணம் 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை மீண்டும் ஒரு சதவீதமாக குறைக்க வேண்டும். வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது. இதனால், நில எடுப்பு பணிகளின்போது பொது மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.சி.வீரமணி, ‘‘வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைத்ததை கட்சிகள் வரவேற்றுள்ளன. மேலும் 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வந்துள்ளது. பதிவுக் கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டாலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது. முன்பெல்லாம் நிலத்தின் மதிப்பு ஒரு லட்சமாக இருந்தால் ரூ.8 ஆயிரம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், தற்போது ரூ.6,700 செலுத்தினால் போதும். இதன்மூலம் ரூ.1.000-க்கு மேல் மிச்சமாகும். வழிகாட்டி மதிப்பு குறைப்பால், வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் பதிவுக் கட்டணம் உயர்த்தப்பட்டது. பத்திரப்பதிவு வருவாய் உயரும்போது பதிவுக் கட்டணம் குறைக்கப்படும்’’ என்றார்.

          
SCROLL FOR NEXT