காவல் துறை மானிய கோரிக்கையின்போது தமிழக காவல்துறை டிஜிபி சட்டப்பேரவையில் இருக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் வலியுறுத்தியதைத் தொடர்ந்து டிஜிபி ராஜேந்திரன் சட்டப்பேரவைக்கு வருகை புரிந்தார்.
சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசும்போது, "காவல்துறை மானிய கோரிக்கையின் போது, டிஜிபி, கமிஷனர் இருப்பது மரபு. அதன்படி டிஜிபி, கமிஷ்னர் சட்டப்பேரவைக்கு வருகை தந்தால்தான் பேசுவேன்" என்றார்.
இதனைத் தொடர்ந்து டிஜிபி ராஜேந்திரன் சட்டப் பேரவைக்கு வருகை தந்தார்.
இதனைத் தொடர்ந்து விவாதத்தில் பங்கேற்ற துரைமுருகன், "காவல் துறையினரின் மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் சசிகுமார் கொலை வழக்கு, சேலம் ரயில் கொள்ளை சம்பவம் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகள் விசாரிக்கபடாமல் உள்ளது" குறித்து துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி துரைமுருகன் குறிப்பிட்ட வழக்குகள் விசாரணையில் இருப்பதாக கூறினார்.
'தமிழகத்தில் கொலை, கொள்ளை குறைவு'
தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாக இருப்பதாக துரைமுருகன் குற்றஞ்சாட்டியதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, "அனைத்து மாநிலங்களிலும்தான் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால், தமிழகத்தில் மற்ற மாநிலங்களைவிட கொலை, கொள்ளை சம்பவங்கள் மிகக் குறைவாகவே நடக்கின்றன" என்றார்.