தமிழகத்துக்கு கர்நாடகா தர வேண்டிய 22.5 டிஎம்சி தண்ணீரில் பாக்கியுள்ள தண்ணீரை உடனடி யாக தரக்கோரி தமிழகம் சார்பில் புதிதாக மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக் கறிஞர், ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி தமிழகத்துக்கு தரவேண்டிய காவிரி பங்கீட்டு நீரான 22.5 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா இதுவரை முறையாக வழங்க வில்லை. கடந்த 25 நாட்களில் இதுவரை 16.58 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட் டுள்ளது. இதனால் தமிழக விவசாயத்துக்கும், குடிநீருக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது’’ என தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
அப்போது நீதிபதிகள், ‘‘கர்நாடகா தரவேண்டிய 22.5 டிஎம்சி தண்ணீரில் நிலுவையில் உள்ள தண்ணீரைத் தரக்கோரி தமிழக அரசு முறையாக புதிய மனுவை தாக்கல் செய்தால், அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’’ என்றனர்.
ஏற்கெனவே காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2016 அக்டோபர் 18-ம் தேதி, இந்த வழக்கில் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் தமிழகத்துக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டுமென உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரத்தில் இருமாநில அரசுகளும் மக்களின் நலன் கருதி சுமூக தீர்வு காணவும் உத்தரவிட்டது.
ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்த ரவுகளை கர்நாடகாஅரசு தொடர்ந்து அவமதிப்பு செய்வதாக கருத்து தெரிவித்து, கர்நாடகா அரசையும், மத்திய அரசையும் கண்டித்தனர்.
இந்நிலையில் அக்டோபர் 1-ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கர்நாடகா அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.