"பாதுகாப்பானது - எளிதானது- இயல்பு வாழ்க்கைக்கு எந்த இடைஞ்சலும் இல்லாதது'' என்று எத்தனை முறை சொன்னாலும், குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் ஆண்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
புதுச்சேரியில் கடந்த 6 ஆண்டுகளில் ஆண்களுக்கான குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை 108 பேர் மட்டுமே செய்துள்ளனர். அதே நேரத்தில் கடினமான சூழலிலும் பெண்கள் 51 ஆயிரத்து 866 பேர் குடும்பக் கட்டுப்பாடு அறுவை செய்திருக்கின்றனர்.
மக்கள் தொகை பெருக்கம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் சூழலில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அரசு தரப்பில் ஒவ்வொரு விதமான பிரச்சாரத்தை முன்வைப்பது வழக்கம்.
தொடக்கத்தில் ஏராளமான குழந்தை பிறப்பு ஒவ்வொரு தம்பதிக்கும் இருந்த சூழலில் "முத்தான வாழ்வுக்கு மூன்று குழந்தைகள்" என பிரச்சாரம் வீதியெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. அதையடுத்து திரும்பிய இடமெல்லாம் "நாம் இருவர் நமக்கு இருவர்", வாசகம் பளிச்சிட்டது. தொடர்ந்து "நாம் இருவர் நமக்கு ஒருவர்" என்று விழிப்புணர்வு வாசகமும் மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் அடுத்த கட்டமாக, "குடும்ப கட்டுப்பாடு விஷயத்தில் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்வது மிக எளிதானது என்ற மருத்துவ உண்மை மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிரதேசங்கள் உள்ளன. மக்கள் தொகை 12 லட்சத்தை தாண்டியுள்ளது. இங்குள்ள நலவழித்துறை குடும்பக் கட்டுப்பாட்டு இரு பாலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. இதில் ஆண்களுக்கான சிகிச்சை "வாசெக்டமி", மகளிருக்கான சிகிச்சை "டியூபக்டெமி" குறித்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் எடுத்துரைக்கப்படுகின்றன. அந்தந்தப் பகுதி மக்களிடையே எளிய விழிப்பு ணர்வை கிராமப்புற செவிலியர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்ற மத்திய சுகாதார நலத்துறையின் வழிகாட்டுதலும் புதுச்சேரியில் பின்பற்றப்படுகிறது.
ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை எளிமையானதாக இருந்த போதும், கடந்த 6 ஆண்டுகளில் 108 பேர் மட்டுமே இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளனர். மகளிருக்கான சிகிச்சை கடினமாக இருக்கும் சூழலிலும் 51 ஆயிரத்து 866 பெண்கள் குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளனர்.
இதற்கான காரணம் குறித்து புதுச்சேரி நலவழித்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டதற்கு, "குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையை பொறுத்தவரை பெண்களுக்கு மயக்க மருந்து (அனஸ்திஷீயா) கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த சிகிச்சை முடிய 20 நிமிடங்களாகும். பெண்கள் 5 நாட்கள் மருத்துவமனையிலும், ஒரு மாத காலம் வீட்டிலும் ஓய்வெடுக்க வேண்டும். தொடர்ந்து 5 மாத காலத்துக்கு அதிக எடையுள்ள பொருட்ளை தூக்கக்கூடாது.
ஆனால், ஆண்களுக்கு செய்யப்படும் சிகிச்சை மிகவும் எளிமையானது. கத்தியின்றி, ரத்தம் இன்றி 5 நிமிடங்களில் குடும்ப கட்டுப்பாடு செய்யப்படுகிறது. சிகிச்சை முடிந்த ஒரு மணி நேரத்திலேயே ஆண்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட முடியும்.
ஆண்கள் குடும்ப கட்டுப்பாடு செய்ய முன்வராததற்கு சமுதாயத்தில் நிலவும் ''ஆணாதிக்கம்'' ஒரு காரணம். ''குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தால் ஆண்மை குறையும்'' என்று தவறான எண்ணமும் ஆண்கள் இதில் ஆர்வம் காட்டாததற்கு மிக முக்கிய காரணம்.
''ஆண்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் தாம்பத்திய வாழ்வில் பாதிப்பு ஏற்படாது.'' என்று தொடர்ந்து விழிப்புணர்வு செய்கிறோம். ஆனால் குறைவான ஆண்களே அறுவை சிகிச்சை செய்கிறார்கள்" என்று குறிப்பிடுகின்றனர்.
கடந்த 6 ஆண்டுகளில் எவ்வளவு பேர்?
புதுச்சேரியிலுள்ள 4 பிராந்தியங்களிலும் கடந்த 6 ஆண்டுகளில் அறுவை சிகிச்சை செய்துள்ளோர் விவரம் நலவழித் துறையில் உள்ளது.
கடந்த 2011-12ல் ஆண்கள் 16 பேர்; பெண்கள் 9,622 பேர். 2012-13ல் ஆண்கள் 13 பேர்; பெண்கள் 7,988 பேர். 2013-14ல் ஆண்கள் 4 பேர்; பெண்கள் 8,746 பேர். 2015-16ல் ஆண்கள் 31 பேர்; பெண்கள் 8,279 பேர், 2016-17ல் ஆண்கள் 24 பேர்; பெண்கள் 8,460 பேர்.
கடந்தாண்டில் (2016-17) புதுவையில் 7,011, காரைக்காலில் 872, மாகேயில் 241, ஏனாமில் 336 என மொத்தம் 8,460 பெண்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆண்கள் 24 பேர் மட்டும் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதில் புதுச்சேரி - 10, ஏனாம் - 12, மாஹே - 2 பேர் செய்துள்ளனர்.
காரைக்கால் பிராந்தியத்தில் இருந்து ஒரு ஆண் கூட அறுவை சிகிச்சை செய்து கொள்ள முன்வரவில்லை.
ஒட்டு மொத்த புதுச்சேரியிலும் கடந்த 2016-17ல் ஆண்கள் 24 பேர் ''வாசெக்டமி'' செய்துள்ளனர். அதே நேரத்தில் பெண்கள் அறுவை சிகிச்சை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.
புதுச்சேரியில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் விவரம்:
2011-12ல் - ஆண்கள் 16 பேர் பெண்கள் 9,622 பேர்
2012-13ல் - ஆண்கள் 13 பேர் பெண்கள் 7,988 பேர்
2013-14ல் - ஆண்கள் 4 பேர் பெண்கள் 8,746 பேர்
2015-16ல் - ஆண்கள் 31 பேர் பெண்கள் 8,279 பேர்
2016-17ல் - ஆண்கள் 24 பேர் பெண்கள் 8,460 பேர்