தமிழகம்

தரக் கட்டுப்பாட்டு அதிகாரி என்று கூறி தென்காசியில் நூதன மோசடி சென்னை பிரமுகர் கைது

செய்திப்பிரிவு

தென்காசி அருகே உள்ள சீவநல்லூ ரைச் சேர்ந்தவர் சட்டநாதன். இவர், குடிநீர் ஆலை அமைக்க ஏற்பாடு செய்துள்ளார். இதற்கு அனுமதி பெற குடிநீர் மாதிரியை, சென்னையில் உள்ள தரக் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சட்டநாதனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒருவர், குடிநீர் ஆலை அனுமதி தொடர்பாக பேச தரக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து வந்திருப்பதாக கூறி, தென்காசியில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துள்ளார்.

அங்கு சென்ற சட்டநாதன், அவரது சகோதரர் பரமசிவன் ஆகியோரிடம் குடிநீர் ஆலைக்கு அனுமதி தர ரூ.20 ஆயிரம் கேட்டுள்ளார். அவரிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளனர். மேலும் ரூ.10 ஆயிரம் தராவிட்டால் அனுமதி அளிக்க முடியாது என, அந்த நபர் கூறியுள்ளார். சந்தேகம் ஏற்பட்டதால் அவரது அடையாள அட்டையை காட்டுமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து அந்த நபர் மிரட்டல் விடுத்துள்ளார். அவரைப் பிடித்து தென்காசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த நபர் சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த ராஜசேகர்(37) என்பது தெரியவந்தது.

தரக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் வேலை பார்க்கும் சிலருடன் ராஜ சேகருக்கு தொடர்பு உள்ளது. அவர்கள் மூலம், சட்டநாதன் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்ததை தெரிந்து கொண்டார். அவரது தொலைபேசி எண்ணை தெரிந்துகொண்டு பணம் வாங்கி மோசடி செய்துள்ளது தெரியவந்தது. ராஜசேகரை கைது செய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT