சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 15 இடங்களில் அமைந்துள்ள பகுதி அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
சென்னை குடிநீர் வாரியம் சார்பில், மாதந்தோறும் 2-வது சனிக்கிழமைகளில் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாத கூட்டம் சென்னையில் 15 இடங்களில் அமைந்துள்ள பகுதி அலுவலகங்களில் இன்று காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை குறைதீர் கூட்டம் நடை பெறும். இதில் பொதுமக்கள் பங்கேற்று, குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான பிரச்சினைகள், நிலுவையில் உள்ள குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் தொடர்பாக புகார் தெரிவிக்கலாம். சந்தேகங்களையும் கேட்கலாம்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் குடிநீர், கழிவுநீர் தொடர்பாக 54 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 41 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 13 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.