தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் நடுவே வழக்கமாக அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படுவது இல்லை. ஏதேனும் முக்கியமான நிகழ்வுகள் இருந்தால் மட்டுமே நடத்தப்படுவது வழக்கம்.
வரும் 17-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை நேற்று கூடியது. சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடந்த நிலையில், மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது.
மத்திய அரசு கொண்டுவந்த வாடகைதாரர்களுக்கான சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவது, அதற்கான சட்டத்தை தமிழகத்தில் கொண்டுவருவது தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 1,000 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இது தவிர, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 3,000-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. தற்போது, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி பராமரிப்புக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதற்கிடையில், டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பும் நிலவி வருவதால், இது தொடர்பாகவும் அமைச்சரவை யில் முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவை தவிர, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், மாநில அரசின் திட்டங்களுக்கான அனுமதி உள் ளிட்டவை தொடர்பாகவும் அமைச் சரவையில் விவாதிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.