தமிழகம்

சீமைக்கருவேலங் காட்டில் வாழ்ந்த நட்சத்திர ஆமைகள் என்னவாயின? - கேள்வி எழுப்பும் இயற்கை ஆர்வலர்கள்

செய்திப்பிரிவு

தமிழகம் முழுக்க சீமைக்கருவேல மரங்கள் ஆறு, குளங்கள், குட்டைகள், ஏரிகளில் நிறைந்து கிடப்பதால் நீர்நிலைகள் வறண்டு, நிலத்தடி நீரும் அதலபாதாளத்துக்கு சென்றுவிடுகிறது. மழையளவு குறைகிறது என்ற காரணத்தைக் கூறி பொது இடங்களில் சீமைக்கருவேல மரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டன பொதுநல அமைப்புகள். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் அழிக்கப்பட்டன.

‘சீமைக்கருவேல மரங்களை நீர்நிலைகளில் அகற்றுவது சரி, காற்றரிப்பு மிகுதியாக உள்ள இடங்களில் அகற்றினால் நிலமே பாழ்படும், மக்கள் அங்கே வசிக்கவே முடியாத சூழல் ஏற்படும், அந்த விறகுகளை நம்பிப் பிழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்’ என கருத்துகள் தெரிவித்து சீமைக்கருவேல மரங்களை வெட்ட இடைக்கால தடை உத்தரவு பெறப்பட்டது.

இப்படி நீதி மன்றங்களால் ஒரு பக்கம் வெட்ட உத்தரவு, பிறகு வெட்டுவதற்கு தடை உத்தரவு என்ற நிலையில், ‘சீமைக்கருவேல மரங்களால் சூழல் கெடுகிறதா? அவற்றை வெட்டலாமா? கூடாதா?’ என சூழலியலாளர்கள் வழக்காடு மன்றமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையின் உச்சமாக, ஏற்கெனவே வெட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் சீமைக்கருவேல மரக் காடுகளில் இருந்த நட்சத்திர ஆமைகள், உடும்பு, நரி உள்ளிட்ட சிறு வன விலங்குகள் என்னவாயின என கேள்வி எழுப்புகின்றனர் இயற்கை சூழலியலாளர்கள்.

உதாரணமாக, திருச்சி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளான சிலா கொல்லைப்பட்டி, கிள்ளுக்கோட்டை, மு.சோழகம்பட்டி, கொத்தம்பட்டி, புலியூர், மலையாண்டிப்பட்டி, நல்லதங்கா பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் சில மாதங்களுக்கு முன்பு அழிக்கப்பட்டுவிட்டன. சிற்சில இடங்களில் சுமார் 60 ஏக்கருக்குள் சீமைக்கருவேல மரங்கள் எஞ்சியிருக்கின்றன.

இந்த சீமைக்கருவேலங் காடுகளில் உடும்பு, நட்சத்திர ஆமைகள், மரநாய், காட்டுப்பூனை, பெருநரி, சின்னநரி, புனுகுப்பூனை, ஜவ்வாது பூனை, வெருவு (எ) வேறொரு வகை காட்டுப்பூனை, கன்றுக்குட்டிபோல் காணப்படும் கிளைமான்கள், புள்ளிமான்கள் என பல உயிரினங்கள் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. அவையெல்லாம் இப்போது இந்த பகுதியில் தென்படுவதே அரிதாக உள்ளது என தெரிவிக்கிறார்கள் இப்பகுதிவாசிகள்.

இதேபோல், கோவையில் குறிச்சிக்குளம், சுண்டக்காமுத்தூர் குளம், பேரூர் குளம் போன்றவற்றில் உடும்பு, காட்டுப்பூனை போன்றவை இருந்தன. அவையும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட பிறகு அவற்றின் சந்தடியே காணோம். இதேபோல்தான் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட பகுதிகளில் எல்லாம் இப்படிப்பட்ட சிறு விலங்குகள் அரவம் சுத்தமாகவே இல்லை என்கிறார்கள் சூழல் ஆர்வலர்கள்.

இது குறித்து இந்திரா பிரியதர்ஷினி விருதாளரும், சூழலியலாளருமான ஏலூர் இ.ஆர்.ஆர். சதாசிவம் கூறும்போது, ‘நான் திருச்சி-தஞ்சாவூர் சாலையில் அடிக்கடி செல்பவன். அப்போவெல்லாம் உடும்பு, காட்டுப்பூனை, புனுகுப்பூனைன்னு அடிக்கடி பார்ப்பதுண்டு. இப்பவெல்லாம் அதுகளை காணவே முடியறதில்லை. மு.சோளகம்பட்டி (புதுக்கோட்டை மாவட்டம்) அருகே உள்ள சீமைக்கருவேலங்காட்டில் ஐந்தாறு புள்ளி மான்கள், ரெண்டு காட்டெருமைகளை பார்த்திருக்கேன். அவற்றை இப்ப எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது.

அவை ஒரு காட்டிலிருந்து இன்னொரு காட்டுக்கு இடம் பெயர்ந்து வாழ்ந்ததால் அதன் வாழ்க்கை இயல்பாக இருந்துள்ளது. இப்போ இடைப்பட்ட பல இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டதால் அவற்றின் இடம்பெயர்வு அரிதாகிவிட்டது. முயல்களை போன்று, தண்ணீர் அவ்வளவு தேவையில்லாத நிலங்களில் வாழக்கூடியவை நட்சத்திர ஆமைகள். அதுவும் இந்த சீமைக்கருவேலங் காடுகளில் பார்த்திருக்கேன். அதுக எல்லாம் இப்ப எங்கே போச்சுன்னே தெரியலை. இந்த மாற்றத்தை சீமைக்கருவேல மரங்கள் வெட்டணும், கூடாது என்று சொல்லும் இருசாராரும் ஆய்வு செய்து மனிதகுலத்துக்கு நல்லது செய்ய வேண்டும்’ என்றார்.

இ.ஆர்.ஆர்.சதாசிவம்.

SCROLL FOR NEXT