ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டிய சென்னை இளைஞரை ராஜஸ்தான் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டி அனுப்பியதாக ராஜஸ்தானைச் சேர்ந்த ஜமீல் முகமது என்பவரை ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழகத்தைச் சேர்ந்த இக்பால் என்ற இளைஞருடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரிந்தது. சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த இக்பால், வெளிநாடுகளில் இருந்து பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்துவருபவர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜமீல் முகமதுவும், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த இக்பாலும் சேர்ந்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டிக் கொடுத்தது தெரியவந்தது. உடனே, ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி சென்னை வந்து இக்பாலைக் கைது செய்து, ராஜஸ்தான் அழைத்துச் சென்றனர்.
நிதி அளித்த 6 பேர்
சமூக வலைதளங்கள் மூலம் ஐ.எஸ். இயக்கத்தின் கமாண்டர் அபு அல் சுதானி என்பவரின் தொடர்பு இக்பாலுக்கு கிடைத்துள்ளது. அபு அல் சுதானி கேட்டுக்கொண்டதன் பேரில் ஐ.எஸ். இயக்க வளர்ச்சிக்கு நிதி திரட்டியிருக்கிறார். இக்பாலிடம் ராஜஸ்தானில் நடத்தப்பட்ட விசாரணையில், ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவி அளித்த சென்னையைச் சேர்ந்த 6 பேரின் பெயர் மற்றும் முகவரியைக் கொடுத்திருக்கிறார். அந்த 6 பேரின் விவரங்களை சென்னை கிண்டியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ) அதிகாரிகளிடம் ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீ ஸார் கொடுத்துள்ளனர். 6 பேரிட மும் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
இந்த 6 பேரில் ஒருவரான ஹாரூண் என்பவர் ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர். சென்னை முத்தையால் பேட்டையில் வசித்து வருகிறார். பர்மா பஜாரில் செல்போன் சர்வீஸ் கடை வைத்துள்ளார். இவரும் ஐ.எஸ். இயக்கத்துக்கு நிதி கொடுத்திருப்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவில் ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், சென்னை வந்தனர். முத்தையால் பேட்டையில் வைத்தே ஹாரூணை அதிரடியாகக் கைது செய்து, நேற்று அவரை ராஜஸ்தான் அழைத்துச் சென்றனர்.