அமர்நாத் யாத்திரை செல்பவர்கள், தீவிரவாதிகள் தாக்குதலில் இருந்து தப்பிக்க போலீஸாரின் எச்சரிக்கை களை கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்று தமிழக முன்னாள் டிஜிபி ஆர்.நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக டிஜிபியாக இருந்த ஆர்.நட்ராஜ், அமர்நாத் யாத்திரை பாதுகாப்புப் பணி அதிகாரியாக 3 முறை இருந்திருக்கிறார். ஒருமுறை அமர்நாத் யாத்திரையும் சென்று பனி லிங்கத்தை வழிபட்டு வந்திருக்கிறார். தற்போது சென்னை மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ஆர்.நட்ராஜ், அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு குறித்து ‘தி இந்து’விடம் கூறியதாவது:
அமர்நாத் யாத்திரையை வெற்றி கரமாக நடத்தி முடிப்பது என்பது ஜம்மு - காஷ்மீர் அரசுக்கும், பாது காப்பு பணிகளை மேற்கொள்ளும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கும் பெரும் சவாலாகவே இருக்கும். 1991-95-ம் ஆண்டுகளில் தீவிரவாதிகள் அச்சுறுத்தலால் யாத்திரை நடத்தப் படவில்லை. தற்போது 7 லட்சம் பேர் வரை யாத்திரை வருகின்றனர்.
ஸ்ரீநகரின் பகல்காம் பகுதிதான் யாத்திரை தொடங்கும் இடம். அதிலிருந்து அமர்நாத் பனி லிங்கம் பகுதி வரை 41 கி.மீ. நீளம் உள்ளது. இதில் கடைசி 15 கி.மீ. முழுவதும் மலைப்பாங்கான பகுதி. இந்த இடத்தில்தான் அனைவரும் நடந்தே செல்வர். 41 கி.மீ. தொலைவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு 2 மாதத்துக்கு முன்பே தனி அதிகாரி நியமிக்கப்படுவார்.
பெரும்பாலும் காலை 8 முதல் மாலை 6 மணி வரை ‘ரோடு ஓப்பனிங் பேட்ரோலிங்’ (ROP) நேரம் இருக்கும். அதாவது, இந்த நேரத்தில் போலீஸாரின் பாதுகாப்பு மிக அதிகமாக இருக்கும். உளவுப்பிரிவு போலீஸார் உட்பட அனைவரும் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். அந்த நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகம் இருக்கும் என்று தீவிரவாதிகளுக்கு தெரியும் என்பதால் தாக்குதல் நடத்த முன்வர மாட்டார்கள்.
தற்போது தாக்குதலுக்கு உள்ளானவர்கள், பேருந்து டயர் பஞ்சர் ஆனதால் ஆர்ஓபி நேரத்தை கடந்து இரவு நேரத்தில் சென்றுள்ளனர். இந்த பாதையில் பல இடங்களில் செக்போஸ்ட்கள் உள்ளன. ஏதாவது ஒரு செக்போஸ்டில் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி இருந்தாலும் தாக்குதலில் இருந்து தப்பியிருக்கலாம்.
அமர்நாத் வாரியம் என்றே தனியாக உள்ளது. இங்கே பதிவு செய்யப்படும் யாத்ரீகர்களின் வாகனங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படு கின்றன. யாத்திரை செல்லும் வழி களில் எல்லாம் ஏராளமான கடைகள் இருக்கும். இந்தக் கடைகளை வைத் திருப்பவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்தான். இந்த 48 நாள் யாத்திரையில் நடக்கும் விற்பனையை வைத்து அவர்கள் ஆண்டு முழுவதும் வாழ்கின்றனர். இதனால் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடப்பதை முஸ்லிம்கள் யாருமே விரும்புவதில்லை.
நூறு சதவீத பாதுகாப்பு என்பது முடியாத காரியம். ஆனால், மத்திய உளவுப்பிரிவு உட்பட பாதுகாப்பு படையினர் அனைவரும் இணைந்து செயல்பட்டால் பாதுகாப்பு மேலும் பலப்படும். தீவிரவாத தாக்குதலில் இருந்து தப்பிக்க ஆர்ஓபி நேரத்தில் மட்டுமே யாத்ரீகர்கள் பயணம் செய்ய வேண்டும். மற்ற நேரத்தில் பாதுகாப்பான இடத்தில் தங்கிவிட வேண்டும்.
இவ்வாறு ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.