மரம் வளர்ப்பு குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் பள்ளிக் குழந்தைகள் 2,500 விதைப் பந்துகளைத் தயாரித்து, அவற்றை காலி இடங்களில் வீசினர். சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் வளாகத்தில் ஐசிஎப் சில்வர் ஜூப்ளி பிரிமிலினரி பள்ளி உள்ளது. இதில், ரயில்வே ஊழியர்களின் குழந்தைகள் உட்பட மொத்தம் 900 பேர் படிக்கின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விதைப் பந்து உருவாக்கும் நிகழ்ச்சியை ஐசிஎப் பொதுமேலாளர் எஸ்.மணி தொடங்கி வைத்தார். இதில், ஐசிஎப் செயலாளர் கே.என்.பாபு உட்பட பலர் பங்கேற்றனர். இது தொடர்பாக ஐசிஎப் சில்வர் ஜூப்ளி பிரிலிமினரி பள்ளி தலைவர் தெபி பிரசாத் தாஸ், ஐசிஎப் அதிகாரி சங்கர் ஆகியோர் கூறும்போது, ‘விதைப் பந்துகளை உருவாக்க வேப்ப மரம், புங்கை மரத்தின் விதையுடன் களிமண், செம்மண்ணுடன் சிறிய அளவில் உரம் சேர்த்து 2,500 விதைப் பந்துகளை உருவாக்கினோம். இவற்றை ஆசிரியர்களின் வழிகாட்டுதல்படி 3, 4, 5-ம் வகுப்பு மாணவர்கள் 120 பேர் இதனை உருவாக்கினர். பிறகு, ஐசிஎப் வளாகத்தில் காலியாக இருந்த 500 மீட்டர் இடத்தில் விதைப் பந்துகள் வீசப்பட்டன’என்றனர்