தமிழகம்

தவறான சிகிச்சையால் சிறுவன் பாதிப்பு: தருமபுரியில் 3 போலி மருத்துவர்கள் கைது

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் மூன்று பேரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப் பட்டி அருகேயுள்ள பிக்கிலி மலையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பட்டாபிராமன். இவரது மகன் சந்தோஷ் (11). சில நாட்களுக்கு முன்பு சிறுவன் விளையாடும்போது கண் அருகே அடிபட்டுள்ளது. அதற்காக பிக்கிலி பகுதியில் கிளினிக் நடத்தும் ஜீவாகணேசன் என்பவரிடம் சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஆனால் சிகிச்சைக்குப் பிறகு கண்ணைச் சுற்றி வீக்கம் ஏற்பட்டு கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்த பெற்றோர் பாப்பாரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகியபோதுதான் சிறுவனுக்குத் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. எனவே அங்குள்ள மருத்துவரின் ஆலோசனைப்படி சிறுவனை மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் போலி மருத்துவர்களின் செயல்பாடு குறித்து பாப்பாரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் தரப்பினர் பாப்பாரப் பட்டி காவல்நிலையத்துக்கு தெரிவித்துள்ளனர். அதன்பேரில் நேற்று பிக்கிலி மலையில் காவல்துறையினர் நடத்திய ஆய்வில் ஜீவாகணேசன் (42) கல்வித்தகுதி இன்றி மருத்துவம் மேற்கொள்வது தெரியவந்தது. உடனே அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், பிக்கிலி பகுதியில் மற்றொரு இடத்தில் கிளினிக் நடத்திய, தருமபுரி அதியமான் கோட்டை பகுதியைச் சேர்ந்த பச்சியம்மாள் (44) என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் போலி மருத்து வராக செயல்பட்டதற்காக ஜீவா கணேசன் ஏற்கெனவே ஒரு முறை கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்கிலி மலைப்பகுதியில் துணை சுகாதார நிலையம் மூலம் போதிய மருத்துவ சேவைகள் வழங்கப்படாத காரணத்தால்தான் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகக் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இதை கண்டித்தும் மலை கிராமங் களில் போதிய மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்க வலியுறுத்தியும் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் தயாராகி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

அதேபோல, காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் பகுதியில், பாலக்கோடு வட்டம் கேப்பன அள்ளியைச் சேர்ந்த சண்முகம் (29) என்பவர் கிளினிக் நடத்தி வந்துள்ளார். அருகிலுள்ள ஒச அள்ளி பகுதியைச் சேர்ந்த சுந்தரம் (40) என்பவர் வயிற்று வலிக்கு சண்முகத்திடம் சிகிச்சை பெற்றதால் பக்க விளைவு ஏற்பட்டு அவதிப்படுவதாக காரிமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சண்முகம் கைது செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT