தமிழகம்

கறம்பக்குடி அருகே அக்னியாற்றில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டுமானம்: வருவாய்த் துறையினர் விசாரணை

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அக்னி ஆற்றில் புதையுண்டிருந்த பழமையான கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரிய காட்டாறுகளில் அக்னி ஆறும் ஒன்று. இந்த ஆற்றில் கறம்பக்குடி அருகே எம்.தெற்கு தெரு ஊராட்சி அய்யங்காட்டில் கட்டப்பட்ட தடுப்பணையை அப்போதைய தமிழக முதல்வர் பக்தவச்சலம் திறந்து வைத்துள்ளார்.

இந்த அணையில் மழைநீரை தேக்கி மழையூர், துவார், கெண்டையன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குளம், ஏரிகளில் தண்ணீரை தேக்கி விவசாயம் மேற்கொண்டுள்ளனர். நாளடைவில் போதியளவு மழை பெய்யாததால் இந்த ஆறு வறண்டது.

இந்நிலையில் இந்த ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு வந்துள்ளது. அவ்வாறு மணல் அள்ளப்பட்டபோது, அங்கு மண்ணில் புதையுண்ட நிலையில் பழமையான கட்டுமானம் காணப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த கறம்பக்குடி வட்டாட்சியர் சக்திவேல் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் மழையூர், செம்பட்டிவிடுதி போலீஸார் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதி பொதுமக்களும் இந்த கட்டுமானத்தை பார்த்துச் செல்கின்றனர்.

இதை நேரில் ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் எ.மணிகண்டன் கூறும்போது, “ஆற்றின் மையப்பகுதியில் 70 அடி நீளத்தில் செம்புறாங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட சுவர் மட்டும் தெரிகிறது. சுமார் 8 அடி உயரத்தில் திட்டுபோன்று உள்ளது. இது 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக உள்ளது.

திட்டின் மேல் பகுதியில் சில செங்கற்களும் ஆங்காங்கே காணப்படுவதால் கோயிலோ, கட்டிடமோ இருந்திருக்கலாம். பின்னாளில் இந்த கட்டுமானம் பெருவெள்ளத்தில் சிதையுண்டு, ஆற்றில் அடித்துச் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது.

சுவர் கட்டமைப்பை ஒப்பிடும்போது இது சுற்றுச்சுவராக தெரிகிறது. ஆற்றுப் பகுதியில் லிங்கம் ஒன்று மண்ணில் புதையுண்டு கிடந்ததை பார்த்ததாகவும், அதை யாரோ எடுத்துச் சென்றுவிட்டதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர்.

லிங்கம் இருப்பதாக தெரிவிக்கப்படும் தகவல் மூலம் இது பள்ளிப்படை என்ற நீத்தார் நினைவு கோயிலாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் இதனருகே மயானம் உள்ளது” என்றார். ஆய்வுக் கழக ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் உடனிருந்தார்.

இதுகுறித்து வட்டாட்சியர் சக்திவேல் கூறியபோது, “இந்த கட்டுமானம் குறித்து தொல்லியல் துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆய்வுக்குப் பிறகே முழு விவரம் தெரியவரும். ஆற்றில் மணல் அள்ளப்படுவதாக கிடைத்த புகாரைத் தொடர்ந்து 3 முறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT