தமிழகம்

கதிராமங்கலம் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்க: ஜி.ராமகிருஷ்ணன்

செய்திப்பிரிவு

கதிராமங்கலம் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எரிவாயு குழாய் வெடித்து ஏற்பட்ட கசிவால் தீப்பற்றி எரிந்ததோடு மண் வளமும் பாழாக்கப்பட்டுள்ளது. இதனால் எழுந்த அச்சத்தால் போராடிய மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாகவும், முரட்டுத்தனமாகவும் தாக்குதல் தொடுத்துள்ளது. அச்சத்தின் காரணமாக போராடிய மக்கள் மீது காவல்துறை ஏவிவிடப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும் பல்வேறு வழக்குகளும் புனையப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை கைவிட வேண்டுமெனவும், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT