தூய்மையான தண்ணீர் தேடி நீலகிரி மலை ரயில் பாதையில் உள்ள ரயில் நிலையங்களை யானைகள் முற்றுகையிடுகின்றன.
நீலகிரி மாவட்டம் வடக்கு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம்-குன்னூர் வனப்பகுதியில் பலாப்பழ சீசனையொட்டி பலாப்பழங்களை உண்ண யானைகள் கூட்டம் இப்பகுதிகளில் முற்றுகையிடும்.
கடந்த இரு மாதங்களாக குட்டி உட்பட 5 யானைகள் மேட்டுப்பாளை யம்-குன்னூர் வனப்பகுதிகளில் உலா வருகின்றன. நேற்று ஒரு ஆண் யானை கல்லாறு அருகேயுள்ள ஹில்குரோவ் ரயில் நிலையத்தினுள் புகுந்தது. ரயில் நிலைய நடைமேடை வழியாக வந்த யானையை கண்ட ஊழியர்கள் ஓடினர்.
யானை நடமாட்டம் குறித்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். ரயில் ஓட்டுநருக்கு தகவல் கொடுத்ததால் ஹில்குரோவ் நிலையத்துக்கு முன்னரே ரயில் நிறுத்தப்பட்டது.
தண்ணீர் தேடி அங்குள்ள குழாய்களை உடைத்து யானை சேதப்படுத்தியது. பின்னர் ரயில்நிலையம் பின்புறமாக பள்ளத்தில் இறங்கி வனத்தினுள் சென்றது. அதன் பின்னர் ரயில் இயக்கப்பட்டது.
ரயில்வே ஊழியர்கள் கூறும்போது, ‘முந்தைய காலங்களில் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றாமல் ஓடிக்கொண்டே இருக்கும். இதனால், வலசை வரும் யானைகளால் எவ்வித தொந்தரவும் இருந்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே யானைகள் வழித்தடங்களில் பல ரிசார்ட்கள் முளைத்து விட்டன. இந்த ரிசார்ட்கள் பாதையை அடைத்ததும், வனம், ஓடைகள் அழிந்தன. மலை ரயிலுக்காக ரயில் நிலையங்களில் தண்ணீர் குழாய்கள் மற்றும் தொட்டி உள்ளதை கண்டறியும் யானைகள் முற்றுகையிட்டு வருகின்றன. தொட்டியில் தண்ணீர் இல்லாவிட்டால், குழாய்களை உடைத்து தண்ணீர் குடிக்கின்றன. வலசை காலங்களில் மட்டுமே யானைகள் நடமாட்டம் இருந்த நிலையில், மழையின்மை காரணமாக தற்போது ஆண்டின் பெரும்பாலான நாட்களில் ரயில் நிலையங்களில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது’ என்றனர்.
நெஸ்ட் அமைப்பின் அறங்காவலர் சிவதாஸ் கூறியதாவது: மேட்டுப்பாளையம்-குன்னூரிடையே குன்னூரிலிருந்து செல்லும் ஆறுடன், காட்டாறுகள் இணைந்து பயணித்து பவானி ஆற்றை அடைகின்றன. வனங்களில் உள்ள விலங்குகளுக்கு இந்த ஆறுகள்தான் நீராதாரமாக விளங்குகின்றன.
ஆனால், துரதிருஷ்டவசமாக குன்னூர் நகரில் சேரும் கழிவுநீர் இந்த ஆற்றில் கலக்கின்றன. கழிவுகளின் சங்கமமாக இந்த ஆறு மாறியுள்ளதால், யானைகள் இந்த நீரை பருகுவதில்லை. இதனால் தூய நீரைத் தேடும் யானைகள், ரன்னிமேடு ரயில்நிலையத்துக்கு வருகின்றன. அங்கே தூய நீர் தேங்கியிருக்கும் குட்டையை முற்றுகையிடுகின்றன என்றார்.