சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் அளித்த பதில்கள்:
எஸ்.செம்மலை (அதிமுக):
தமிழில் புதிய புதிய சட்ட சொற்களை உருவாக்கவும், சட்ட அகராதியை உருவாக்கவும், நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்கவும் சட்ட ஆட்சி மொழி ஆணையம் மிகவும் அவசியமானது. எனவே, இந்த ஆணையத்தை மீண்டும் உருவாக்க அரசு முன்வருமா?
அமைச்சர் சி.வி.சண்முகம்:
நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்கும் பணியை சட்டத் துறையே மேற்கொண்டு வருகிறது. சட்ட சொற்களை கண்டறிந்து தமிழில் அகராதியை உருவாக்க சட்ட ஆட்சி மொழி ஆணையம் வேண்டும் என்ற செம்மலையின் கோரிக்கை நியா யமானது. எனவே, இதுகுறித்து அரசு பரிசீலனை செய்யும்.
எஸ்.விஜயதரணி (காங்கிரஸ்):
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அரசு முன்வருமா?
அமைச்சர் சி.வி.சண்முகம்:
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க சட்டப் பேரவையில் தீர்மானம் நிறை வேற்றும் அதிகாரம் நமக்கு இல்லை. உச்ச நீதிமன்ற முழு அமர்வுதான் இதற்கு அதிகாரம் அளிக்க வேண்டும். தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கெனவே உச்ச நீதிமன்ற முழு அமர்வு நிராகரித்துள்ளது. ஆனாலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர முயற்சி யால் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் மீண்டும் பரிசீல னைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. 4 மாநில உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகள் வழக்காடு மொழியாக உள்ளன. அதுபோல சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி யாக்க இந்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
துரைமுருகன் (திமுக):
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை உயர் நீதிமன்றமும் ஏற்றுக்கொண் டது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
அமைச்சர் சி.வி.சண்முகம்:
உறுப் பினர்கள் அனைவரது ஒத்துழைப் புடன் தமிழை வழக்காடு மொழி யாக்க அரசு தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும்.