ஊத்தங்கரை அருகே மழை ஏரிக்குள் நின்று கொண்டு ஒப்பாரி வைத்து கிராம மக்கள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் காட்டேரி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் வெப்பாலம்பட்டி. இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக போதிய மழையின்றி ஏரி, குளம், குட்டை, கிணறு உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு காட்சியளிக்கின்றன.
நிகழாண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியால் குடிநீருக்கே மக்கள் திண்டாடி வருகின்றனர். தென்மேற்கு பருவமழை தொடங்காமல் உள்ளதால் விவசாயிகள் மழையை எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கிராம மக்கள் ஒன்றிணைந்து வெப்பாலம்பட்டி ஏரிக்குள் நின்று கொண்டு மழை வேண்டி முன்னோர்கள் வழியில் ஒப்பாரி வைத்து வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி நடந்தது.
அனைவரும் வீட்டில் இருந்து கேழ்வரகு களி சமைத்து எடுத்து வந்து ஏரியில் படையலிட்டனர். இதனைத் தொடர்ந்து மழை வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்தனர். 2 மணி நேரம் மழை வேண்டி கிராமியப் பாடல்கள் பாடினர். கேழ்வரகு களியை சாப்பிட்டுவிட்டு இரவில் கிராம மக்கள் அனைவரும் வீட்டிற்குத் திரும்பினர்.